ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் பிரச்சனை எழுந்தாலும் QR-ஐ ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க வேண்டும்; தமிழக அரசு உத்தரவு

சென்னை: ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் பிரச்சனை எழுந்தாலும், பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், QR-ஐ ஸ்கேன் செய்தும், குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்தும், ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு தடையின்றி வழங்க வேண்டும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கைரேகை பதிவு செய்யும் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் தொடரும் நிலையில், உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், மண்டல, வட்டார அளவில் அனைத்து பணியாளர்களுக்கும் பயிற்சி வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் சுமார் 2,11,87,625 ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. ரேஷன்பொருட்கள் வெளிச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, இதனை தடுக்கும் விதமாக குடும்ப தலைவர் அல்லது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கும் விதமாக பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது.

ஆனால், பயோமெட்ரிக் முறையில் கைரேகைகள் பதிவு செய்யும் இயந்திரந்தில், பல இடங்களில் கைரேகைகள் சரிவர பதிவாகவில்லை. இதனால், ஆதார் அட்டையில் மீண்டும் கைரேகையை பதிவுசெய்து கொண்டு வரும்படி ரேஷன் கடை ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த நிலையில், ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் பிரச்சனை எழுந்தாலும், பொருட்களை விநியோக செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: