ஆற்காட்டில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி மூடப்பட்டுள்ள அண்ணாசிலை: அகற்ற கோரிக்கை

ஆற்காடு: ஆற்காட்டில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி  அண்ணாசிலையை மூடி போடப்பட்டுள்ள துணியை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தல் வரும் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 26ம் தேதி அறிவித்துள்ளது. அதன்படி 21 மாநகராட்சி, 138 நகராட்சி,  490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

இதனால் ஆற்காடு மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள், பேனர்கள், பதாகைகள் ஆகியவை அகற்றப்பட்டு வருகிறது. மேலும் ஆற்காடு வேலூர் மெயின் ரோட்டில் உள்ள அண்ணாசிலை  துணி போட்டு மூடப்பட்டுள்ளது. மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகத்தில் உள்ள காந்தி சிலையை தவிர்த்து  அண்ணா, இந்திராகாந்தி, எம்ஜிஆர் சிலைகளையும் துணி போட்டு மூட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சமுதாய தலைவர்கள் மற்றும் மறைந்த தலைவர்களின் சிலைகளை மூடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆனால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி ஆற்காட்டில் அண்ணாசிலை மூடப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. எனவே அண்ணாசிலையை மூடிய துணிகளை  அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: