போலி காசோலை கொடுத்து துணிக்கடையை லீசுக்கு எடுத்த டிப் டாப் ஆசாமி கடையில் இருந்த பொருட்களுடன் மாயம்

சென்னை: சென்னையில் 5 லட்சம் ரூபாய் போலி காசோலை கொடுத்து துணிக்கடையை லீசுக்கு எடுத்து துணிகளை திருடிக்கொண்டு தலைமறைவான டிப் டாப் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சாலி கிராமத்தை சேர்ந்த 28 வயதான கார்த்திக் விருகம்பாக்கத்தில் கடந்த ஓராண்டாக துணிக்கடை நடத்தி வருகிறார். தொழில் எதிர்பார்த்த அளவிற்கு நடக்காததால் கடையை காலி செய்ய முடிவு செய்துள்ளார். இதனையடுத்து துணிக்கடை விற்பனைக்கு இருப்பதாக ஓ.எல்.எக்ஸ் இணையதளத்தில் விளம்பரம் அளித்துள்ளார். இதனை பார்த்து கடந்த 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை கார்த்திக்கின் கடைக்கு டிப் டாப்பாக உடையணிந்த இளைஞர் ஒருவர் வந்துள்ளார். கடையை தான் லீசுக்கு எடுத்து நடத்திக்கொள்வதாக கூறி உள்ளேயுள்ள பொருட்களுடன் விலையை கேட்டுள்ளார். 5 லட்சம் ரூபாய் என கார்த்திக் விலை பேசி இருக்கிறார். அவர் அதற்கான காசோலையை கொடுத்து சாவியை பெற்றுக்கொண்டுள்ளார். சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கட்கிழமை காலை வங்கிக்கு சென்று காசோலையை கொடுத்த போது அது போலி என அறிந்து கார்த்திக் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

காசோலை கொடுத்த நபரை தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அவர் துணிக்கடைக்கு சென்று பார்த்தபோது கடையில் இருந்த அனைத்து பொருட்களையும் மர்ம நபர் சுருட்டிக்கொண்டு தப்பி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் கார்த்திக் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓ.எல்.எக்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் பல்வேறு மோசடிகள் நடப்பதாகவும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கடந்த வாரம் சென்னை சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்ட நிலையில் மீண்டும் ஒரு நூதன மோசடி அரங்கேறியுள்ளது.

Related Stories: