போளூரில் உள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோயிலில் புதிய மரத்தேர் அமைக்க வேண்டும்-மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைக்கு பக்தர்கள் கோரிக்கை

போளூர் : போளூரில் உள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோயிலில் புதிய மரத்தேர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போளூரில் உள்ள ஸ்ரீலஷ்மி நரசிம்மர் கோயிலும், கைலாசநாதர் கோயிலும் தமிழக அரசு அறநிலையத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. லஷ்மி நரசிம்மசுவாமி  கோயில் விஜயநகரப் பேரரசர்கள் காலத்தில் கட்டப்பட்டு ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்களைக் கண்டுள்ளது.

குறிப்பாக வைகாசி மாதத்தில் நடைபெறும் பிரமோற்சவ விழா பிரசித்தி பெற்றது. கடந்த 1938ம் ஆண்டு பிரமோற்சவத்தின்போது திருத்தேர் வீதி உலா நடைபெற்ற நேரத்தில் சிந்தாதரிப்பேட்டை தெருவில் அச்சு முறிந்து ஒரு வீட்டின் மீது விழுந்து வீடு இடிந்து போனது. அந்தத் தேரை வடிவமைத்த ஸ்தபதியின் மகன் தேரை நிறுத்தி தடுக்க முயற்சித்தபோது தேர் சக்கரத்தில் சிக்கி அவரும் உயிரிழந்தார். அதற்குப் பிறகு அந்தத் தேரினை சீரமைக்காமலும், புதிய தேர் நிர்மாணிக்காமலும் அப்படியே விட்டு விட்டனர்.

இதையடுத்து தும்பை நாச்சியம்மன் கோயிலில் உள்ள தேர் பெருமாள் கோயில் பிரமோற்சவ விழாவிற்குப் பயன்படுத்தினர். அந்தத் தேரும் ஒருசில ஆண்டுகளில் பழுதானது. அதனைச் சீரமைக்க  அறநிலையத்துறை மறுத்துவிட்டது. தும்பை நாச்சியம்மன் கோயில் தனியார் நிர்வாகத்தில் உள்ள கோயில் என்பதால் அதனுடைய தேரினை சீரமைக்க மறுப்பு தெரிவித்து வந்தது. இதனால் அதன்பிறகு தும்பை நாச்சியம்மன் கோயில் தேரினை பெருமாள் கோவில் பிரமோற்சவத்திற்கு கொடுக்க மறுத்து விட்டனர்.

அதற்குப் பிறகு தும்பை நாச்சியம்மன் கோயிலில் இரும்பு சட்டங்களால் ஆன புதிய தேரினை  வடிவமைத்தனர். இருப்பினும் அந்தத் தேர் பயன்படுத்தப்படாமல் சுமார் 25 வருவடங்களுக்கு மேலாக தும்பை நாச்சியம்மன் கோயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கோயிலுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு கோயில் கும்பாபிஷேகமும், புதியதாக தேர் வடிவமைக்கப்பட்டு தேர்த்திருவிழாவும் நடைபெற்றது.

மேலும், பெருமாள் கோயிலுக்கு தேர் இல்லாததால், கோவிந்தசாமி என்பவர் தெருவடிச்சான் என்று கூறப்படும் சப்பரம் ஒன்றினை நன்கொடையாக வழங்கினார். இந்தச் சப்பரத்தில் தான் தற்போது திருவிழாக்காலங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. இதையடுத்து அப்பகுதியினர் பெருமாள் கோயிலுக்கு நிரந்தர தேர் அமைக்கக்கோரி அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி நடைபெற்று வருவதால், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தினர், நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் பெருமாள் கோயிலுக்கு புதிய தேர் அமைக்க வேண்டும் என்று போளூர் பொதுமக்கள், பக்தர்கள், பிரமோற்சவ விழாக்குழுவினர், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: