குருவிகுளம் அருகே நடத்தை சந்தேகத்தில் தலையில் கல்லை போட்டு மனைவியை கொன்ற கணவர் கைது

திருவேங்கடம் : குருவிகுளம் அருகே நடத்தை சந்தேகத்தில் மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகேயுள்ள அத்திப்பட்டி கேகே நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சின்னமுனியசாமி (36). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கவிதா(32) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகன் முகேஷ்(9) மகள் நவசியா(6) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். சின்ன முனியசாமி கோவில்பட்டியில் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இதனால் வாரம் ஒருமுறை ஊருக்கு வந்து செல்வார்.

கவிதா அத்திப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சமூக தணிக்கை ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இதனால் செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பாராம். இந்நிலையில் நேற்று சின்ன முனியசாமி ஊருக்கு வந்திருந்தார். அப்போது கவிதா யாரிடமோ அதிக நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அவரது நடத்தையில் சந்தேகமடைந்த சின்ன முனியசாமி, கவிதாவிடம்  கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கவிதா தனது துணிகளை எடுத்துக்கொண்டு அதே ஊரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு கிளம்பினார்.

உடனே சின்ன முனியசாமி மனைவியை தடுத்ததால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சின்ன முனியசாமி, கவிதாவை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளார். இருப்பினும் ஆத்திரம் அடங்காமல் அருகில் இருந்த கல்லை தூக்கி மனைவியின் தலையில் போட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களது மகனும், மகளும் ஓடி வந்தனர். அங்கு தாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். இதையறிந்த உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

மனைவியை கொலை செய்த சின்ன முனியசாமி நேராக குருவிகுளம் போலீசில் சென்று சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் பேச்சால் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: