மதுராந்தகம், செய்யூரில் தேசிய வாக்காளர் தின விழா

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் ஆர்டிஓ அலுவலகம், செய்யூர் வாட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் தேசிய வாக்காளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. மதுராந்தகம் ஆர்டிஓ அலுவகத்தில் வாக்காளர் தின விழா நேற்று நடந்தது. ஆர்டிஓ சரஸ்வதி தலைமை தாங்கினார். தாசில்தார் நடராஜன் முன்னிலை வகித்தார். தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சக்திவேல் வரவேற்றார். தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகள் நடந்தன. இதில், வெற்றி பெற்ற மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள், தனியார் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆர்டிஓ சரஸ்வதி பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து, தேசிய வாக்காளர் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு கோலம் வரைந்தனர். அதில் வருவாய் துறையினர் சார்பில், இந்திய வரைபடம், தேசிய வாக்காளர் சின்னம், தேசிய பறவை மயில் என பல வண்ண கோலங்கள் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல், செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. ஆர்டிஓ சரஸ்வதி தலைமை தாங்கினார். செய்யூர்  வட்டாட்சியர் வெங்கட்ரமணன் முன்னிலை வகித்தார்.

தேர்தல் பிரிவு துணை  வட்டாட்சியர் சண்முகம் வரவேற்றார். இதில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேசிய வாக்காளர்கள் குறித்த விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்பட பல்வேறு போட்டிகள்  நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்  வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 12வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கலெக்டர் ஆர்த்தி தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் வாக்காளர் தின உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள இளம் வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அட்டைகளை கலெக்டர் வழங்கினார். மேலும் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவில் அரையிறுதிக்கு தேர்வு பெற்ற 4 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

இதையடுத்து, மாவட்டத்தின் 4 சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பு சுருக்க திருத்தம் 2022ல் சிறப்பாக பணிபுரிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 4 பேருக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: