கோயில் சொத்துகள், நிதியை சிறப்பாக கையாளும் ஊழியர்களுக்கு மதிப்பெண் வழங்கும் திட்டம்: மார்க் குறைந்தால் டிரான்ஸ்பர் கட்டாயம்; ஆணையர் குமரகுருபரன் அதிரடி நடவடிக்கை

சென்னை: கோயில் பராமரிப்பு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், புதிய முயற்சிகள், சொத்துகள், நிதி மேலாண்மையை சிறப்பாக கையாளும்  ஊழியர்களுக்கு மதிப்பெண் வழங்கும் புது திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிகபட்சம் மதிப்பெண் எடுப்போருக்கு பதவி உயர்வு வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான சிறப்பு விதிகளில் பதவி உயர்விற்கு பரிசீலிக்கப்படும்போது பணி மூப்பினை காட்டிலும் திறமைக்கும், தகுதிக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழக அரசு பணியாளர் பணி நிலைமை சட்டம் 2-16 பிரிவு 41(2)ன்  தெரிவித்தவாறு பதவி உயர்வில் பணி மூப்பினை காட்டிலும் திறமைக்கும், தகுதிக்கும் முன்னுரிமை அளித்திடலாம் என கருதப்படுகிறது. அதேபோன்று, பணிமாறுதல் வழங்கும்  போது இதனை கருத்தில் கொள்ளலாம். சொத்துகள் மேலாண்மைக்கு 3 மதிப்பெண், நிதி மேலாண்மை, கோயில் பராமரிப்பு தலா 2 மதிப்பெண், பக்தர்கள் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல், பொது நிர்வாகம், புதிய முயற்சிகளுக்கு தலா 1 மதிப்பெண் என மொத்தம் 10 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. சுயமதிப்பீட்டறிக்கை தயார் செய்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 15ம் தேதிக்குள் உரிய அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். அதன் நகல் ஆணையருக்கு அனுப்ப வேண்டும்.

செயல் அலுவலர்கள் மற்றும் ஆய்வர்கள் மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் இந்த பொருண்மைகள் அடிப்படையில் பரிசீலிக்கப்படும். விருப்ப மாறுதல் விண்ணப்பத்துடன் தற்போது பணிபுரியும் கோயில் மற்றும் ஆய்வர் சரகத்தில் கடந்த ஓராண்டிற்கான சுய மதிப்பீட்டறிக்கையை இணைத்து அனுப்பவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பெறப்படும் சுயமதிப்பீட்டறிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு 5 மதிப்பெண்களுக்கு குறைவாக பெறும் செயல் அலுவலர் மற்றும் ஆய்வர்கள் நிர்வாக நலன் அடிப்படையில் கட்டாயமாக பணி மாறுதல் செய்யப்படுவர். அவர்களது மந்தமான செயல்பாடு குறித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்படும்.

9 மதிப்பெண்களுக்கு மேல் செயல் அலுவலர்கள் மற்றும் ஆய்வர்கள் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்படும். அதனடிப்படையில் பதவி உயர்வில் அவர்களுக்கு விதிகளுக்குட்பட்டு முன்னுரிமை வழங்கப்படும். செயல் அலுவலர்களை பொறுத்தவரை கோயில்களின் சொத்துகள் மேலாண்மையில் அவர்களது செயல்பாடுகள் அடிப்படையில் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கு விதிகளுக்குட்பட்டு பரிசீலனை செய்யப்படும். ஆய்வர்களை பொறுத்தவரை செயல் அலுவலர் இல்லாத கோயிலில் இதன் அடிப்படையில்  சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகிகள் செயல்படுத்துவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். அதனடிப்படையில் ஆய்வர்களின் செயல்பாட்டினை மதிப்பீடு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: