குப்பைத்தொட்டியாக பயன்படுத்தப்பட்ட படிக்கிணறு சீரமைப்பு: 53 அடி ஆழத்தில் நீரோட்டம் கண்டுபிடிப்பு

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத் நகரின் பாரம்பரிய சின்னமாக கருதப்படும் மிக அழகிய படிக்கிணறு பல ஆண்டுகளுக்கு பின் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. செகந்தராபாத் நகரின் பன்சிலால் பேட் என்ற இடத்தில் உள்ள நல்ல போச்சம்மா கோவில் அருகே இந்த படிக்கிணறு அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த படிக்கிணறை அந்தபகுதி பொதுமக்கள் குப்பைத் தொட்டியாக பயன்படுத்தி வந்தனர். தற்போது அதிலிருந்து மொத்தம் 500 டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளன. இந்த படிக்கிணறு 53 ஆதி ஆழம் கொண்டதாக உள்ளது.

இதன் நடுவில், அதாவது 20- லிருந்து 25 அடி உயரத்தில் நீரோட்டம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குப்பைகளும், வண்டல் மண்ணும் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளதால் படிக்கிணற்றில் நீர்நிரம்பத் தொடங்கியுள்ளது. 42லட்சம் லிட்டர் அளவுக்கு இதில் நீர் நிரப்பலாம் என்றும், ஆனால் கடந்த 45 ஆண்டுகாலமாக குப்பை தொட்டியாக மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் என்றும் புனரமைப்பு பணிகளுக்கான மேற்பார்வையாளரும், தன்னார்வ நிறுவனத் தலைவருமான கல்பனா ரமேஷ் கூறியுள்ளார். ஐத்ராபாத் நகரில் ஏற்கெனவே, கர்ஷி பௌலி, கொக்கா பேட், கொண்டாக்கோர், நரசிங்கி ஆகிய 4 இடங்களில் படிக்கிணறுகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

இந்த பன்சிலா பேட் படிக்கிணற்றை தோண்டும் பணி பெருநகர ஐத்ராபாத் மாநகராட்சியின் மேற்பார்வையின் கீழ் 8 மாதங்களுக்கு முன்னர் தொடங்கி, தற்போது முடிக்கப்பட்டுள்ளது. கல்பனா ரமேஷ் என்ற தன்னார்வ நீர் மேலாண்மை நிறுவன தலைவரின் தலைமையில் பணியாளர்கள் இந்த பணியை சிறப்புற செய்து முடித்துள்ளனர். இந்த படிக்கிணறு ஒரு காலத்தில் செகந்தராபாத் நகரின் பாரம்பரிய சின்னமாக போற்றப்பட்ட ஒன்றாகும். இதனை சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் தெலுங்கானா அரசு இறங்கியுள்ளது.                   

Related Stories: