நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை

நாகை: உப்புநீரை பூமிக்கடியில் செலுத்துவதால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக குத்தாலம் பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவன சுத்திகரிப்பு நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி மாசு நீர் சுத்திகரிப்பு நிலையமானது செயல்பட்டு வருகிறது. அங்கு கெட்ட உப்புநீரை 1800 மீட்டர் ஆழத்தில் ராட்சத போர்கள் மூலம் பூமிக்கடியில் செலுத்துவதால் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உபரிநீராக மாறி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதனை கண்டித்து ஓ.என்.ஜி.சி மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முன்பு பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாசுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அகற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். உவர் நீரை குடிப்பதால் புற்றுநோய், இளம்பிள்ளை வாதம், வாந்தி, பேதி ஏற்படுவதாகவும் போராட்டத்தில் பங்கேற்றோர் குற்றம் சாட்டினர். மேலும் சீரான தூய்மையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Related Stories: