திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் வழியாக 3.77 லட்சம் பேர் தரிசனம்: ரூ.26.06 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபத வாசல் என்றும் அழைக்கப்படும், சொர்க்க வாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்தால் வைகுண்டத்தில் உள்ள மகாவிஷ்ணுவை தரிசனம் செய்த பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோயிலை போல் திருப்பதியிலும் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக பக்தர்களை அனுமதிக்கலாம் என அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்தாண்டும், இந்தாண்டும் 10 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதன்படி, இம்மாதம் 13ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். 10 நாட்கள் முடிந்ததால், நேற்று முன்தினம் இரவு  10 மணிக்கு சொர்க்க வாசல் மூடப்பட்டது. தொடர்ந்து, நேற்று முதல் வழக்கம்போல் நித்ய பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சொர்க்க வாசல் வழியாக 10 நாட்களில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 943 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 999 பக்தர்கள் வேண்டுதலுக்காக மொட்டை அடித்துள்ளனர். இந்த 10 நாளில் உண்டியல் காணிக்கையாக ரூ.26.06 கோடி  கிடைத்துள்ளது.

அடுத்தாண்டு 2 வைகுண்ட ஏகாதசி

அடுத்தாண்டில் (2023) 2 வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற உள்ளது. அப்போது ஜனவரி 2ம் தேதியும், டிசம்பர் 23ம் தேதியும் இருமுறை சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அவ்வழியாக 20 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

Related Stories: