ஒன்றிய - மாநில அரசுகளின் உறவை சிதைக்கிறார் மோடி: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நேற்று மாலை 6.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜயவாடா புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி; பாஜ மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்பு, இந்திய கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் உச்சகட்டமாக இந்திய ஆட்சிப்பணி 1954ம் ஆண்டு சட்டத்தை திருத்த முயற்சி செய்கின்றனர். மோடி செய்யும் இந்த செயல்களால் ஒன்றிய மாநில அரசுகளின் உறவு என்ற பாலம் சிதைக்கப்படும் அபாயம் உள்ளது.  நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் மீது மதமாற்றம் சம்பந்தமாக தற்போது குற்றம் சாட்டியுள்ளார். முதலில் நடிகை குஷ்பு எவ்வாறு மதம் மாறினார் அல்லது அவருடைய முன்னோர் எவ்வாறு மதம்  மாறினார்கள் என்பதை முதலில் அவர் தெளிவுப்படுத்த வேண்டும்.

காங்கிரஸைப் பொறுத்தவரையில் மதத்தை யாரிடமும் வலுக்கட்டாயமாக கொண்டு திணிக்கக்கூடாது. அதுதவிர ஒருவர் விரும்புகின்ற இறைவழிபாட்டை செய்ய, உரிமை உண்டு. இதுதான் காங்கிரஸ் நிலை. லாவண்யா விவகாரத்தில்  பாஜ அரசியல் செய்ய நினைக்கிறார்கள். நான் லாவண்யாவின் வாக்குமூலத்தை படித்துப் பார்த்தேன். அதில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதைப் போன்ற ஒரு வற்புறுத்தல் இருந்ததாக கூறியுள்ளார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததற்கு இப்போது அவர் செய்ததுக்கும் என்ன சம்பந்தம் வந்தது. ஒரு வேளை சம்பந்தம் இருக்குமேயானால் மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும். தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்பு, காங்கிரஸ் கட்சி திமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கும்.

Related Stories: