‘யாரும் அச்சப்பட வேண்டாம்’ பெண்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம்-ராணிப்பேட்டை எஸ்பி தீபாசத்யன் பேட்டி

அரக்கோணம் : ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. எனவே பெண்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என எஸ்பி தீபாசத்யன் தெரிவித்தார்.

வேலூர் காவல் துறை சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுக்க முழு பாதுகாப்பு அளித்தல், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யும்போது பின்பற்ற வேண்டிய பல்வேறு நடைமுறைகள் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு பல்வேறு உத்தரவுகளை  டிஐஜி ஆனிவிஜயா பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், ராணிப்பேட்டை எஸ்பி தீபாசத்யன் நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்கு நிலுவையில் உள்ள வழக்கு விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக பல்வேறு அறிவுரைகள், ஆலோசனைகளையும் வழங்கினார். அப்போது அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்திகணேஷ், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் இருந்தனர்.

பின்னர் எஸ்பி தீபாசத்யன், நிருபர்களியிடம் கூறுகையில், மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் பெண்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. யாருக்கேனும் பிரச்னை என்றால் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையங்களை அணுகலாம். கடந்த 2 நாட்களில் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் மதுவை கூடுதல் விலைக்கு விற்றது தொடர்பாக 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் கஞ்சா விற்பனை தொடர்பாகவும் ஒருவர் கைது  செய்யப்பட்டுள்ளார். இந்த தொடர்வேட்டை தினமும் நடத்தப்படும் என்றார்.

Related Stories: