செம்பட்டி அருகே கலை, அறிவியல் கல்லூரிக்காக இடம் வழங்கிய விவசாயிகளுக்கு பாராட்டு

சின்னாளபட்டி : செம்பட்டி அருகே கூட்டுறவுத்துறை சார்பாக தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் மூலம் ஆரம்பிக்கப்பட உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமையும் இடத்தை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் மாதவன் பார்வையிட்டார். மேலும், கல்லூரிக்கான இடத்தை தானமாக வழங்கிய விவசாயிகளை நேரில் சந்தித்து பாராட்டினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் அறநிலையத்துறை சார்பாக ஒட்டன்சத்திரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், ஆத்தூர் தொகுதியில் கூட்டுறவுத்துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், கொடைக்கானல் மன்னவனூரில் கூட்டுறவுத்துறை சார்பாக தேசிய கூட்டுறவுஆராய்ச்சி நிலையம் அமைகிறது.

ஆத்தூர் தொகுதியில் சீவல்சரகு ஊராட்சிக்கு உட்பட்ட சுதனாகியபுரம் அருகில் சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைவதற்கான உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதற்கான இடத்தை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கியதோடு விரைவில் கல்லூரி கட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, நேற்று தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநரும், கூடுதல் பதிவாளருமான மாதவன் கல்லூரி அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். அதன் பின்பு கூட்டுறவுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வேண்டுகோளை ஏற்று கோடிக்கணக்கான மதிப்பிலான இடத்தை கல்லூரிக்காக தானமாக வழங்கிய விவசாயிகளை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதற்கு காரணமான ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசனுக்கு நன்றி தெரிவித்தார். கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் செல்வக்குமார் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியின் போது திண்டுக்கல் மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் செல்வக்குமார், ஆத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் மகேஷ்வரி முருகேசன், கூட்டுறவு வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், சக்கரவர்த்தி மணிமாறன், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கண்காணிப்பாளர் உதயக்குமார், திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் கிருஷ்ணகுமார், பிள்ளையார்நத்தம் ஊராட்சிமன்ற தலைவர் உலகநாதன், மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் பத்மாவதி ராஜகணேஷ், திமுக மாணவரணி துணை அமைப்பாள் அருண்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: