போடி அருகே பங்காருசாமி கண்மாயில் அரைகுறையாக நடந்த குடிமராமத்து

*அதிமுக ஆட்சியில் ரூ.49 லட்சம் ‘வேஸ்ட்’

*கரை உடைப்பால் 50 சதவீத தண்ணீர் காலி

போடி : போடி அருகே, பங்காருசாமி கண்மாயில் ரூ.49 லட்சம் மதிப்பில் நடந்த குடிமராமத்து பணி அரைகுறையாக நடந்ததாக, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். கரை உடைப்பால் கண்மாயில் உள்ள 50 சதவீத தண்ணீர் காலியாகி வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.போடியிலிருந்து தேனிக்கு செல்லும் சாலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த பங்காருசாமி கண்மாய் 90 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மழை மற்றும் கொட்டகுடி ஆற்றில் வரும் தண்ணீரை இக்கண்மாயில் தேக்கி வைத்து நூற்றுக்கணக்கான ஏக்கரில் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், பங்காருசாமி கண்மாயில் வடக்கு, நடுப்பகுதி, தெற்கு என 3 மடைகள் உள்ளன.

இந்த மடைகளின் வழியாக திறக்கப்படும் தண்ணீர் மூலம் அணைக்கரைப்பட்டி, மீனா விலக்கு, துரைச்சாமிபுரம், தோப்புப்பட்டி ஆகிய ஊர்களில் பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு மேலாக கண்மாய் மடைகளை சீரமைக்காததால், தண்ணீரை முழுமையாக தேக்கி வைக்க முடியாமல் இருந்தது. மடைகள் பலவீனமாகி வருவதால், அதனை ஒட்டியுள்ள நாற்புறமும் உள்ள கரைகளும் பலவீனமாகி, 1 டிஎம்சி தண்ணீர் முழு கொள்ளளவை எட்டும்போது, கண்மாய் உடைந்து விடும் என விவசாயிகள் மஞ்சளாறு அணை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுக்கு முன் அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் ஒதுக்கப்பட்டு 4 கரைகள், 3 மடைகளை புதுப்பித்து பலப்படுத்த உத்தரவிடப்பட்டது. ஆனால், பணி அரை குறையாக நடந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பங்காருசாமி கண்மாயில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் நடுவில் உள்ள மடைகளை உடைத்து புதுப்பித்தனர். ஆனால், பணி அரை குறையாக நடந்தது. கண்மாயில் நான்குபுறமும் உள்ள கரைகளை புதிய மண்ணை கொட்டி பலப்படுத்தவில்லை. இதற்கு பதிலாக பொக்லைன் இயந்திரம் மூலம் கரை அருகே இருபுறமும் சுரண்டி சுரண்டி மண்ணை அள்ளிப்போட்டு கரைகளையும் கரைத்து பலமில்லாமல் பணிகளை முடித்துள்ளனர்.

இதனால், ரூ.49 லட்சம் பயனில்லாமல் போனது. கடந்த 5 மாதம் பெய்த தொடர் கனமழையால், கரைகளில் எலிப் பொந்துகள் உருவாகியுள்ளன. 50க்கும் மேற்பட்ட இடங்களில் குழிகள் உருவாகி கரைகள் பலமிழந்துள்ளன. மேலும், கண்மாயில் 100 சதவீதம் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், தெற்கு மடை அருகே உடைப்பு வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. இதனால், 50 சதவீதம் தண்ணீர் காலியாகியுள்ளது. நெல் சாகுபடிக்கு பாசனப் பற்றாக்குறை ஏற்படும் அவலம் உள்ளது. எனவே, கண்மாயில் உள்ள தெற்கு மடையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் ரூ.49 லட்சத்தில் நடந்த குடிமராமத்து பணியை ஆய்வு செய்ய வேண்டும்’ என்றனர்.

Related Stories: