குறுகிய சிந்தனையில் இருந்து நாடு விடுபட்டுள்ளது: பிரதமர் மோடி பேச்சு

அகமதாபாத்:  ‘டெல்லியில் சில குடும்பங்களுக்காக மட்டுமே கட்டுமானங்கள் நடந்த நிலையில், அந்த குறுகிய சிந்தனையில் இருந்து நாட்டை வெளியே கொண்டு வந்துள்ளோம்,’ என பிரதமர் மோடி பேசியுள்ளார்.குஜராத் மாநிலம், கிர்சோம்நாத் மாவட்டத்தில் புகழ்பெற்ற சோம்நாத் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி இருந்து வருகிறார். இந்த கோயிலுக்கு அருகே புதிதாக பயணிகள் இல்லம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலமாக திறந்து வைத்து பேசியதாவது: நம் முன்னோர்கள் மத மற்றும் கலாசார பாரம்பரிய வடிவில் பல்வேறு விஷயங்களை நமக்காக விட்டுச் சென்றுள்ளனர். ஆனால், முன்பெல்லாம் நமது மதம், கலாசார பாரம்பரியத்தை பற்றி பேசுவதில் தயக்கம் இருந்து வந்தது. சுதந்திரத்துக்கு பிறகு டெல்லியில் ஒரு சில குடும்பங்களுக்காக மட்டுமே புதிய கட்டுமானங்கள் நடந்தன. இந்த குறுகிய சிந்தனையில் இருந்து நாட்டை வெளியே கொண்டு வந்துள்ளோம்.

மேலும், ஏற்கனவே இருக்கும் நினைவு சின்னங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், புதிய தேசிய நினைவு சின்னங்கள் நிறுவப்பட்டுள்ளன. டெல்லியில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நினைவிடத்தை ஒன்றிய அரசு கட்டியுள்ளது. ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமுக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இதேபோல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஷியாம்ஜி கிருஷ்ணா வர்மா உள்ளிட்ேடாரையும் அரசு பெருமைப்படுத்தி உள்ளது. இதுமட்டுமின்றி பழங்குடியின மக்களின் பாரம்பரியத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவை சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமல்லாமல், நமது அடையாளத்துடன் இணைக்கவும் உதவுகிறது. சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு 4 அம்சங்கள் முக்கியமாகும்.

சுற்றுலா தலங்களில் அதிக பயணிகளை கவருவதற்கு, அடிப்படை  வசதிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சுற்றுலா பயணிகள் மிக குறைந்த நேரத்தில் பல இடங்களை சுற்றிப் பார்ப்பதற்கு விரும்புவார்கள். எனவே, அவர்களின் நேரத்தை வீணாக்கமால் சிறந்த இணைப்பை உருவாக்கி தருவது அவசியமாகும். மேலும், நமது மனநிலையை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதுமை மற்றும் நவீனமயத்தை புகுத்த வேண்டும். நாம் நவீனமாக இருக்க வேண்டும் என்றாலும் கூட, அதே நேரம் நமது பாரம்பரியத்தையும் மறக்கக் கூடாது. அவற்றை இந்த உலகுக்கு சரியான முறையில் எடுத்துக்காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தியா கேட்டில் 28 அடி உயரத்தில் நேதாஜிக்கு சிலை

பிரதமர் மோடி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஒட்டு மொத்த நாடும் நேதாஜி சுபாஷ்  சந்திரபோசின் 125வது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில்,  கிரானைட் கற்களால் செய்யப்பட்ட அவரது பிரமாண்ட உருவ சிலை, இந்தியா கேட் பகுதியில் நிறுவப்படும் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது, நாடு அவருக்கு செலுத்தும் நன்றி கடனாகும்.

நேதாஜி சிலையை அமைக்கும் பணி முடியும் வரையில், அந்த இடத்தில் நேதாஜியின் உருவம் முப்பரிமாண வடிவில் திரையிடப்படும். அவருடைய முப்பரிமாண வடிவ சிலையை 23ம் தேதி திறந்து வைக்கிறேன்,’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை மேற்குவங்க முதல்வர் மம்தாவும், நேதாஜியின் மகள் அனிதாபோசும் வரவேற்றுள்ளனர்.கிரானைட் கற்களால் ஆன நேதாஜியின் சிலை, 28 அடி உயரம் மற்றும் 6 அடி அகலத்தில் உருவாக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Related Stories: