பட்டாசு விபத்தில் பலியான 27 பேருக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்கும் பசுமை தீர்ப்பாய உத்தரவு ரத்து: மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் கடந்தாண்டு ஏப்ரலில் நடந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதில், ‘விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் தமிழக அரசு வழங்கியுள்ளது. ஆனால், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கும்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இவ்வளவு இழப்பீட்டைதான் வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இருக்கிறதா? அதை உச்ச நீதிமன்றம்தான் தெளிவுபடுத்த வேண்டும்,’ கோரியது. இந்த வழக்கோடு, தமிழ்நாடு பட்டாசு சங்கங்கள் தொடர்ந்த வழக்கையும் இணைத்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் நேற்று இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் குமணன்ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தனர்.

மேலும், ‘தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கலாம். ஆனால், பொதுவான உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடாது. அதனால் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால், விருதுநகர் விபத்து வழக்கை மீண்டும் பிப்ரவரி 14ம் தேதி பட்டியலிட்டு, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்,’ என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தனர்.

Related Stories: