ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு திமுகவின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:  திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: “இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்தியத் தொகுப்பிற்கு மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்கு ஒதுக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும்” எனக் கடந்த 7ம் தேதி அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “இடஒதுக்கீடு அளிப்பதற்கான முக்கிய காரணங்களைத்  தனது விரிவான தீர்ப்பில் 20ம் தேதி(நேற்று முன்தினம்) வெளியிட்டிருப்பதை வரவேற்கிறேன். மாநில அரசுகள் ஒன்றிய அரசின் தொகுப்பிற்கு வழங்கும் 15 விழுக்காடு எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 50 விழுக்காடு முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்குச் சமூகநீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் அகில இந்தியத் தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டினை இதர பிற்படுத்தப்பட்டோர் சமுதாய மாணவர்களுக்கு வழங்கத் தடையில்லை என்று தீர்ப்பளித்தது.

ஆனாலும் அந்தத் தீர்ப்பினைச் செயல்படுத்தாமல் இருந்ததால் - உயர் நீதிமன்றத்தில் மீண்டும் திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்த பிறகுதான் ஒன்றிய அரசு-27 விழுக்காடு இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டது. இப்படி சமூகநீதிக்கானப் போராட்டத்தில் முத்தாய்ப்பாக அடுத்தடுத்த வெற்றியைப் பெற்றது கழகம். இந்த அறிவிப்பு தொடர்பான வழக்கில் தான் திமுகவும் தன்னை இணைத்துக் கொண்டு-நமது மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அகில இந்தியத் தொகுப்புக்காக ஒதுக்கப்படும் இடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை-அடிப்படையான 9 காரணங்களை முன்வைத்து வாதாடினார். குறிப்பாக “மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தகுதியை நிர்ணயிக்க முடியாது” என்ற தனது ஆணித்தரமான வாதத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி நீதியரசர்கள் முன்பு எடுத்துரைத்தார். அந்தத் தீர்ப்பின் 69 பக்கங்களில் இடஒதுக்கீடு, நம் சமூகநீதி போராட்டத்துக்கு பெருமிதம் அளிக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “சம வாய்ப்பே சமூகநீதி என்பது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோதே விவாதித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது”, “முன்னேறிய வகுப்பினரிடம் போட்டியிடுவதற்குச் சமுதாயத்தில் பின்தங்கியோருக்கு இருக்கும் தடைகளை நீக்கி உண்மையான சமத்துவத்தை அளிப்பதே இடஒதுக்கீடுக் கொள்கை” “தகுதியின் அடிப்படையில் எனக் கூறி ஒதுக்கி வைக்கும் அளவுகோல் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்து - அதனால் பாதிக்கப்படுவோரின் கண்ணியத்தைக் குறைக்கிறது” “அரசியல் சட்டம் சம வாய்ப்புக்கு மதிப்பளிக்கிறது. தனி மனிதனின் மதிப்பையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கிறது. அரசியல் சட்டத்தால் சமுதாயத்தில் மதிக்கப்பட்டவற்றை “தகுதி” எனக் கூறி மறுக்க முடியாது” “தகுதியைக் குறுகிய வட்டத்திற்குள் வரையறுப்பது சமவாய்ப்பு வழங்குவதற்கு அணை போடுகிறது” “இடஒதுக்கீடு தகுதிக்கு எதிரானது அல்ல” என மிக அருமையாகக் கோடிட்டுக் காட்டியிருப்பது - மண்டல் கமிஷன் தீர்ப்பிற்குப் பிறகு - இந்தியச் சமூகநீதி வரலாற்றில் கிடைத்துள்ள மிக முக்கிய வெற்றி.

அதுவும் திமுகவின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது எனத் தெரிவித்துக் கொள்கிறேன். “வளமான குடும்பச் சூழல் காரணமாக உள்ள சமூக, பொருளாதார மற்றும் கலாசார பின்னணி மூலம் ஒருசாராருக்குக் கிடைக்கும் பயன்களை நுழைவுத் தேர்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை” என்றும், “தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே தகுதி அல்ல” என்றும் கூறப்பட்டுள்ள தீர்ப்பின் மணியான கருத்துகள் நுழைவுத் தேர்வினை முதன் முதலில் ரத்து செய்து-அதற்குக் குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அங்கீகாரத்தையும் பெற்ற முத்தமிழறிஞர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்திருக்கிறது. அரசியல் சட்டம் நமக்கு அளித்துள்ள சமூகநீதி-சம வாய்ப்பு அனைத்தும் ஓரணியில் அணி வகுத்து - நீட் தேர்வுக்கு எதிரான நம் போராட்டத்திலும் தமிழ்நாட்டிற்குத் துணை நிற்கும். வெற்றி பெறுவோம்.

Related Stories: