சென்னை சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய விவகாரம்: காவல் ஆய்வாளர் உள்பட 9 போலீசார் மீது 3 பிரிவுகளில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு

சென்னை : சென்னை சட்டக்கல்லூரி மாணவரை தாக்கியதாக காவல் ஆய்வாளர் உள்பட 9 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் நஜீமா உள்பட 9 போலீசார் மீது 3 பிரிவுகளில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆபாசமாக திட்டுதல், பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் சந்திப்பு அருகே கடந்த 13ம் தேதி வியாழனன்று  அதிகாலை  கொடுங்கையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வியாசர்பாடி புது நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல்ரஹீம்(21) என்ற நபர் அவ்வழியாக சென்று கொண்டிருந்தார். முகக்கவசம் அணியாமல் சென்றதால் போலீசார் அவரிடம் முகக்கவசம் அணியும் படி அறிவுறுத்தினர். அப்பொழுது போலீசாருக்கும் அப்துல் ரஹீமுக்கும்  இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அப்துல் ரஹீம் அங்கு பணியில் இருந்த காவலர் உத்தரகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. பிறகு உத்தரகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்துல் ரஹீமை கைது செய்த போலீசார், அவரை கடுமையாக தாக்கியதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அப்துல் ரஹீம் தரப்பில் சென்னை மாநகர கமிஷனருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.  இதுகுறித்து விசாரணை நடத்த  சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். விசாரணையில் சட்டக்கல்லூரி மாணவனை காவலர்கள் கடுமையாக தாக்கியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி கொடுங்கையூர் காவலர் உத்தரகுமார் மற்றும் ஏட்டு பூபாலன் ஆகிய இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் கமிஷனர் உத்தரவிட்டார். அதைதொடர்ந்து சட்டக்கல்லூரி மாணவன் மீது தாக்குதல் நடத்திய தலைமை காவலர் பூமிநாதன், காவலர் உத்தரகுமார் ஆகிய இருவரையும் அதிரடியாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த தாக்குதலுக்கு காரணமான எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நசீமா மற்றும் கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜன். முதல் நிலை காவலர் ஹேமநாதன் ஆகிய 3 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னை மாவட்ட வியாசர்பாடி பகுதியை சேர்ந்த அப்துல்ரஹீம் என்பவரை கொடுங்கையூர் காவல் நிலைய காவலர்களால் தான் துன்புறுத்தப்பட்டதாக அளித்த புகாரின் மீது காவல் நிலை ஆணை எண் 151ன் கீழ் சென்னை வடக்கு உட் கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்ட ஆட்சியரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

மேலும், மேற்படி புகார் தொடர்பாக காவல் நிலைய ஆணை எண் 151ன் கீழ் விரிவான விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை தொடர்ந்து வருவாய் கோட்ட ஆட்சியர்(ஆர்டிஓ) தனது விசாரணையை இன்று தொடங்கினார்.

மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு:

சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. செய்தியின் அடிப்படையில் ஆணைய தலைவர் எஸ்.பாஸ்கரன் தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்தார்.

Related Stories: