திசையன்விளையில் காதலன் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்ட கர்ப்பிணிக்கு காவல் நிலையத்தில் திருமணம்

திசையன்விளை : திசையன்விளையில் காதலன் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்ட கர்ப்பிணிக்கு காவல்நிலையத்தில் திருமணம் நடந்தது.திசையன்விளை முருகேசபுரத்தைச் சேர்ந்த பாண்டி மகள் சசிகலா(29). இவருக்கு திருமணமாகி 11 வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. இவரது கணவர் 7 வருடங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இவரது மகள் திருச்சியில் மாமியார் வீட்டில் உள்ளார். சசிகலா பத்திரம் எழுதும் தனியார் அலுவலகத்தில் வேலை செய்கிறார்.

இவரும், திசையன்விளை-இட்டமொழி ரோட்டை சேர்ந்த கட்டேரிபெருமாள் மகன் முத்து(27) என்பவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் நெருக்கமாக பழகியதில் தற்போது சசிகலா 6 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் முத்து, தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக நெல்லை எஸ்பி, வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலையம், திசையன்விளை காவல்நிலையத்திலும் புகார் செய்தார்.  போலீசாரின் பேச்சுவார்த்தையில் முத்து, சசிகலாவை திருமணம் செய்ய சம்மதித்த நிலையில் திடீரென்று மறுத்தார்.

இதையடுத்து சசிகலா, காதலன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஜமால், சசிகலாவிடம் போராட்டத்தை கைவிட்டு மறுநாள் காவல்நிலையயம் வருமாறு  கூறினார். நேற்று காலை இருதரப்பையும் அழைத்து இன்ஸ்பெக்டர் பேசினார்.  எனினும் காதலன் தரப்பில் திருமணத்திற்கு மறுத்து வந்தனர். காதலன் தரப்பிற்கு வள்ளியூர் மகளிர் இன்ஸ்பெக்டர் ஆதரவளிப்பதாக சசிகலா தரப்பினர் நெல்லை எஸ்.பிக்கு புகார் தெரிவித்தனர். எஸ்.பி.சரவணன் நேர்மையாக விசாரிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து சில நிமிடங்களில் காதலன் முத்து, சசிகலாவை திருமணம் செய்ய சம்மதித்தார். உடனடியாக அருகிலுள்ள விநாயகர் கோயிலில் வைத்து திருமணம் நடந்தது.

Related Stories: