ரூ.21 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகள் பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது

திருமலை: ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கார் மற்றும் வேனில் கடத்திய ₹21 லட்சம் மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், பொம்மூறு காவல் நிலைய எஸ்.ஐ ஜெகன்மோகன்ராவ் மற்றும் போலீசார் கடந்த 15ம்தேதி திவான் என்ற கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு கார் மற்றும் வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, 13 மூட்டைகளில் 424 கிலோ கஞ்சா கடத்தியது தெரிந்தது.

விசாரணையில், அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த மகாராஜா(23), ஸ்டார்வின்(27), வினேஜ்குமார்(32) என்பது தெரியவந்தது. மேலும்,  விசாகப்பட்டினத்தில் உள்ள மலைக்கிராமத்தில் இருந்து கஞ்சா வாங்கி தமிழகத்திற்கு கடத்தி சென்று, தூத்துக்குடியில் உள்ள கனிஷ்கர் பிரேம்குமார் என்பவருக்கு வழங்க இருந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கார், வேன், 6 செல்போன்கள், ₹21 லட்சத்து 13 ஆயிரத்து 550 மதிப்புள்ள 13 பைகளில் இருந்த 424 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் ராஜமகேந்திரவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கனிஷ்கர் பிரேம்குமார் என்பவரும் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: