கொரோனா கட்டுப்பாடுகள் எதிரொலி பொய்கை மாட்டு சந்தையில் வர்த்தகம் சரிவு-வியாபாரிகள் வேதனை

வேலூர் : தமிழகத்தில் பெரிய கால்நடை சந்தைகளில் ஒன்றாக கருதப்படும் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கூடுகிறது. ஜெர்சி வகை கலப்பினம் மற்றும் நாட்டு கறவை மாடுகள், காளைகள், உழவு மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், கோழி என அனைத்து கால்நடைகளும் இங்கு விவசாயிகள் மற்றும் கால்நடை வியாபாரிகளால் கொண்டு வரப்படுகின்றன. அதனுடன் கால்நடைகளுக்கான மணிகள், கயிறுகள், விவசாய கருவிகள், காய்கறிகள்கூட சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொய்கை மாட்டுச்சந்தைக்கு அனுமதியில்லாத நிலையில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சில மாதங்களாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில் களைக்கட்டிய சந்தை பின்னர் தொடர் மழையின் காரணமாக சரிவை கண்டது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் பொய்கை மாட்டுச்சந்தை கூடியது. தொடர்ந்து இரண்டு வாரங்கள் வர்த்தகம் களைக்கட்டிய நிலையில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்தது.

இதனால் பொய்கை மாட்டுச்சந்தையில் கடந்த வாரமே மாட்டுச்சந்தைக்கு வரும் வியாபாரிகள், விவசாயிகள், இடைத்தரகர்கள் கொரோனா விதிகளை கடுமையாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டனர். மேலும் விற்பனைக்காக கொண்டு வரப்படும் கால்நடைகளின் எண்ணிக்கையையும் குறைத்துக் கொள்ளுமாறும், மதியம் 2 மணி வரையே கால்நடை வர்த்தகம் அனுமதிக்கப்படும் என்றும், அதன்பிறகு காய்கறி சந்தை நடக்கும் என்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்த அறிவிப்புகள், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று பொய்கை மாட்டுச்சந்தைக்கு குறைந்த எண்ணிக்கையிலான மாடுகளே வந்தன. அதனால் வர்த்தகமும் ₹50 லட்சத்துக்கும் கீழே சரிந்ததாக கால்நடை வியாபாரிகள், விவசாயிகள், இடைத்தரகர்கள் வேதனை தெரிவித்தனர்.

3 ஆண்டாக டெண்டர் விடவில்லை

பொய்கை மாட்டுச்சந்தைக்கான நுழைவு கட்டணம் வசூலிக்க ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் டெண்டர் விடப்படும். கடந்த 2019ம் ஆண்டு ₹1 கோடியே 17 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பரவல் காரணமாக பொய்கை மாட்டுச்சந்தை நடத்தப்படவில்லை. அதோடு கடந்த 3 ஆண்டுகளாக மாட்டுச்சந்தை நுழைவு கட்டண வசூலிப்புக்கான டெண்டர் நடத்தப்படவில்லை.  இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘3 ஆண்டுகளாக மாட்டுச்சந்தையே சரியாக நடத்தப்படவில்லை. இதில் டெண்டர் விடுவதற்கும் வழியில்லை. அதோடு, அப்போது டெண்டர் எடுத்தவர், தான் எடுத்த ஏலத்தொகையையும் இதுவரை வருவாயாக ஈட்டவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்றனர்.

Related Stories: