திருமலை நாயக்கர் மகாலை கட்டியவர் திருவள்ளுவர்: மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ ‘பகீர்’ பேச்சு

மதுரை: திருமலை நாயக்கர் மகாலை கட்டிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்தவர் எம்ஜிஆர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதால் அதிமுகவினர், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மன்னர் திருமலை நாயக்கரின் 439வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து நேற்று, மரியாதை செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘பாதுகாப்பு கருதியே குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார வாகன ஊர்திக்கு அனுமதி இல்லை என கூறப்படுகிறது. தமிழக கலாச்சாரத்தை பிரதமர் பிரதிபலித்து வருகிறார். வட மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழர் போல பிரதமர் நடந்து கொள்கிறார். தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் வகையில் ஒன்றிய அரசு நடந்து கொள்ளவில்லை. தமிழர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு எந்தவொரு நிலைபாட்டையும் எடுக்காது’’ என்றார். முன்னதாக சிலைக்கு மாலை அணிவித்து பேசிய செல்லூர் ராஜூ, ‘‘உலகத்தமிழ் மாநாடு நடத்தும்போது, இந்த மகாலை பார்வையிட்ட எம்ஜிஆர், மகாலை கட்டியவருக்கு இங்கு சிலை இல்லையா எனக்கருதி, இந்த திருவள்ளுவர் சிலையை இங்கே நிறுவினார்’’ என்றார். திருமலை நாயக்கர் மன்னரின் சிலை என்பதற்கு பதில், திருவள்ளுவர் என குறிப்பிட்டதால் இவரின் பேச்சை கேட்ட அதிமுகவினர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

Related Stories: