தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின்றி பழநியில் திருக்கல்யாணம்

பழநி: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநியில் திருக்கல்யாணம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூச திருவிழா கடந்த 12ம்  தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று மாலை 5 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் நடந்தது. இதையொட்டி வள்ளி - தெய்வானை சமேதர முத்துக்குமாரசுவாமிக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. சிவாச்சாரியார்கள் பூஜைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின் மாலை மாற்றுதல், அப்பளம் உடைத்தல் போன்ற திருமண சடங்குகள் நடந்தன.

தொடர்ந்து வெள்ளி ரதத்திற்கு பதிலாக வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று மாலை 4.30 மணிக்கு சிறிய தேரில் தேரோட்டம் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், யூடியூப் மற்றும் கோயில் வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பழநியில் குவிந்த பக்தர்கள்: தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பழநியில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்படாத நிலையில் கிரிவீதியில் வலம் வந்து பாதவிநாயகர் கோயில் முன்பு வழிபாடு நடத்தி திரும்பி சென்றனர். கிரிவீதி முழுவதும் பக்தர்கள் காவடி ஆட்டம், அலகு குத்துதல், தேர் இழுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

Related Stories: