டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்திக்கு தடை கட்சித்தலைவர்கள் கண்டனம்

சென்னை: குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்: தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் இடம்பெற்ற அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதியில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் இச்செயல் தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களையும், ஒட்டுமொத்த தமிழகத்தையும், தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும். ஒன்றிய பாஜக அரசின் இந்நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி:  வருகின்ற ஜனவரி 26ல் ‘குடியரசு நாள்’ விழாவில் புதுடில்லி அணிவகுப்பில் இடம்பெறவேண்டி தமிழ்நாடு அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்தி இரண்டு ஆயுள் தண்டனை பெற்று கோவை சிறையில் செக்கிழுத்த செம்மல்   கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரும், வெள்ளையருக்கெதிராகப் போர்க் குரல் கொடுத்து களத்தில் நின்ற வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோர் கொண்ட ஊர்திகளுக்கு இடமில்லை என்று மறுக்கப்பட்டு இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது ஆகும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: குடியரசு நாள் அணிவகுப்பில் இடம் பெறுவதற்கான  தமிழக அரசு ஊர்தியில் பாரதி, வ.உ.சி., வேலு நாச்சியார் படங்கள் இடம் பெறத் தமிழக அரசு முடிவு செய்து, ஒன்றிய அரசின் கவனத்திற்கு அனுப்பி இருந்தது. அந்த ஊர்திக்கு, அணிவகுப்பில் இடம் தர முடியாது என ஒன்றிய அரசு மறுத்து இருப்பது, ஏழரைக் கோடித் தமிழ் மக்களை அவமதிக்கும் செயல் ஆகும். கூட்டு ஆட்சிக் கொள்கைக்கு வேட்டு வைக்கும் செயல் ஆகும்.  

சமக தலைவர் சரத்குமார்: தென் மாநிலங்களில் கர்நாடகா தவிர்த்து பிற மாநிலங்களின் அலங்கார ஊர்தியையும், மேற்கு வங்க அலங்கார ஊர்தியையும் மத்திய அரசு புறக்கணித்திருப்பது இந்திய தேசத்தின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் மாண்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இந்த வருட குடியரசுத் தினத்தன்று நடைபெறும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பின் போது தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியும் அணிவகுப்பில் இடம்பெறாது என்ற அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. நடைபெற இருக்கின்ற குடியரசுத் தின விழாவின் போது தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் இடம்பெற வேண்டும், தமிழக தியாகிகள், வீரர்கள் ஆகியோரது பெயரும், புகழும் தேசம் முழுவதும், உலகம் முழுவதும் பரவ வேண்டும். எனவே தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியின் அணிவகுப்பும் இடம்பெற வேண்டும் என்ற தமிழர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு டெல்லியில் நடத்தும் குடியரசுத் தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியும் அணிவகுக்கக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு நடைபெற்ற அணிவகுப்பில் கொரோனா காரணம் காட்டி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி , வேலு நாச்சியார், பாரதியார் போன்ற தலைவர்களின் நினைவுகளைப் போற்றும் விதமாக தமிழக அரசின் சார்பில் ஊர்தி தயாரிக்கப்பட்டு அந்த ஊர்தி குடியரசு தினவிழாவில் அணிவகுப்பாக கொண்டுவரப்படும் என்ற நிலையில் அதற்கு ஒன்றிய அரசு மறுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை தமிழக மக்களின் மனங்களைப் புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. எனவே, ஒன்றிய அரசு, உடனடியாக தமிழக அலங்கார ஊர்தியையும் அணிவகுப்பில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாடு ஊர்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தயாரித்துள்ள விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றி ஒன்றிய அரசு என்ன நினைக்கிறது. இவர்களது தியாக வாழ்வை சித்தரிக்கும் ஊர்திகளுக்கு குடியரசு தின அணி வகுப்பில் இடமில்லை எனில் தமிழகம் கொந்தளிக்கும் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும். உடனடியாக தமிழ்நாடு அரசின் ஊர்திக்கு அனுமதி அளிக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும். தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களையும் அவமதிக்கும் ஒன்றிய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஒன்றிய அரசின் வன்மப் போக்கைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கட்சி அமைப்புகளை கேட்டுக் கொள்வதுடன் இப்போராட்டத்தில் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து போராட முன் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறது என முத்தரசன் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: