கிரீமிலேயர் உச்ச வரம்பை ₹15 லட்சம் ஆக உயர்த்த வேண்டும் : ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்ட அறிக்கை:  கிரீமிலேயர் வரம்புக்கான வருவாயைக் கணக்கிடும் போது ஊதியத்தை சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று 1993ம் ஆண்டில் அப்போதைய நரசிம்மராவ் அரசு தீர்மானித்ததற்கு, சமூகநீதியை பின்னணியாகக் கொண்ட பல காரணங்கள் உள்ளன. ஆனால், ஊதியமும் கணக்கில் சேர்க்கப்பட்டால், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் மாத வருமானம் ₹67 ஆயிரம் இருந்தால் அக்குடும்பத்தின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு விடும்.

எனவே, கிரீமிலேயர் வரம்புக்கான வருவாயை கணக்கிடும் முறையை மறு ஆய்வு செய்யும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டு,  1993ம் ஆண்டு குறிப்பாணையின்படி, ஊதியம் தவிர்த்த பிற ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் மட்டுமே கிரீமிலேயர் வரம்புக்கான வருவாயை கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்க வேண்டும்.

மற்றொருபுறம், கிரீமிலேயர் வரம்பு உடனடியாக உயர்த்தப்பட வேண்டும். கிரீமிலேயர் வரம்பு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட வேண்டும். கடந்த 2013ம் ஆண்டில் ₹6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட கிரீமிலேயர் வருமான வரம்பு, 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ₹8 லட்சமாக உயர்த்தப்பட்டது.

 அடுத்து 2020ஆண்டில் அடுத்த உயர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டிருந்தால், 2023ம் ஆண்டில் அதற்கு அடுத்த உயர்வு அறிவிக்க வேண்டியிருக்கும்.ஆனால், 2020ம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு  உயர்த்தப்படாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான தவணையையும் சேர்த்து கிரீமிலேயர் வரம்பை ₹15 லட்சம் ஆக உயர்த்தி, சமூகநீதியைக் காக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: