வண்டலூர் பூங்காவில் நாளை முதல் 31ம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

சென்னை :தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி அதிகரித்து கொண்டே இருப்பதால், கடந்த 6ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இது வரும் 31ம் தேதி வரை நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் வணிக வளாகம், தியேட்டர் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கடற்கரை பகுதிகள் மூடப்பட்டுள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட உள்ளது.  இதுகுறித்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை முதல் வரும் 31ம் தேதி பொதுமக்களுக்கு மூடப்படுகிறது. 31ம் தேதி நிலைமையை மதிப்பாய்வு செய்து, அதற்கேற்ப முடிவு எடுத்து பின்னர் அறிவிக்கப்படும். 76 பேருக்கு கொரோனா: பூங்கா ஊழியர்களுக்கு நடைபெற்ற கொரோனா பரிசோதனையில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

Related Stories: