நாட்டை துண்டாக்கும் முயற்சியில் பாஜ பொய் சொல்லும் பல்கலை. மோடி: சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு: மக்கள் விரோத சட்டங்கள் கொண்டுவந்து நாட்டு மக்கள் மீது சுமத்தி தேசத்தை துண்டாக்க முயற்சி மேற்கொண்டு வரும் பாஜவின் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தும் சக்தி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது என்று சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் சித்தராமையா கூறினார். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் செயல்படுத்த வலிறுத்தி நாங்கள் நடத்தி வந்த போராட்டத்தை ஆட்சியாளர்கள் கொடுத்த நெருக்கடி உள்ளிட்ட காரணங்களுக்காக நிறுத்தியதாக ஆளும் கட்சியை சேர்ந்த சில அமைச்சர்கள் பேசி வருகிறார்கள். நாங்கள் பாதயாத்திரை தொடங்கிய நாளில் ஏற்பட்ட நடுக்கம், நாங்கள் வாபஸ் வாங்கிய நாளில் தான் முதல்வர் உள்பட பாஜ தலைவர்களுக்கு நின்றது என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

பாதயாத்திரையை நிறுத்த நேரடியாக எங்களுடன் மோதாமல், குறுக்கு வழியை கண்டறிந்து வெற்றி பெற்றதாக தம்மட்டம் அடித்து கொண்டுள்ளனர். நாங்கள் பாதயாத்திரை தொடங்கிய நாளில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று பாசிடிவ் குறைவாக இருந்தது. கடந்த ஐந்து நாட்களில் 20 ஆயிரத்தை கடந்தது. மக்களின் உயிர் பிரச்னையாக இருப்பதால், தற்காலிகமாக பாதயாத்திரையை ஒத்தி வைத்து உள்ளோம். மீண்டும் தொடங்கும்போது, பாஜவில் இருக்கும் பலர் காங்கிரஸ் பாதயாத்திரையில் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக தான் பாஜவிடம் மக்கள் அதிகாரத்தை கொடுத்துள்ளனர்.

அதை பயன்படுத்தி நல்ல நிர்வாகம் கொடுக்க வேண்டிய பிரதமர் மோடி, மக்களவையில் பெரும்பான்மை பலம் இருக்கிறது என்ற மமதையில் மக்கள் விரும்பாத செயல்களை எல்லாம் தலைமையில் சுமத்தி வருகிறார். ஆட்சி எந்த கட்சிக்கும் நிரந்தரமில்லை என்பதை மோடி புரிந்துகொள்ள வேண்டும். மக்களவையில் 300 உறுப்பினர்கள் பலமுள்ளது என்பதற்காக குறைவான உறுப்பினர் வைத்துள்ள காங்கிரஸ் பயந்துவிடாது. ஆட்சியாளர்களின் அடக்குமுறையை போராடும் சக்தி காங்கிரசுக்கு உள்ளது. பச்சை பொய் சொல்வதில் பிரதமர் மோடிக்கு இணையாக யாரும் இருக்க முடியாது. பொய் சொல்லும் பல்கலைக்கழகமாக பிரதமர் மோடி உள்ளார். தேச நலன் குறித்து பேசும் பாஜ தலைவர்கள் தான், உண்மையான ஜனநாயகத்தை படுகொலை செய்து வருகிறார்கள். நாட்டை துண்டாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். அதை தடுத்து நிறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: