தமிழ்பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அறிவிக்க வேண்டும்: கேரள முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கேரள முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:

‘தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14ம் நாளினை பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது. ஜனவரி 14ம் தேதி (இன்று), புனிதமான ‘‘தை” தமிழ் மாதத்தின் முதல் நாளாகும். ஆனால் இந்த 2022ம் ஆண்டில் ஜனவரி 15ம் நாளினை (நாளை) இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, தமிழ் சமூகங்களிடையே, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14ம் தேதி (இன்று) அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories: