கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேகொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தற்போது மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2.47 லட்சம் பேரை கொரோனா தாக்கிய நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். ஒமிக்ரான் வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்துக்கு மேலாக பதிவாகி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கையும் தினமும் ஒரு லட்சத்துக்கு மேலாக அதிகரித்து வருகிறது.

அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு ஊரடங்கை அறிவித்துள்ளன.

பெரும்பாலான மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே முன்களப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இணை நோய்கள் கொண்ட 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும், 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன் தொற்று பாதிப்பு 1 லட்சத்து 68 ஆயிரத்து 63 ஆக இருந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 94 ஆயிரத்து 720 ஆக பதிவானது. நேற்று 2 லட்சத்தை தாண்டி பதிவானது. இந்நிலையில் இன்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 47 ஆயிரத்து 417 பேருக்கு புதியதாக தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,63,17,927 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 380 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,85,035 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 84,825 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது 11,17,531 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் 5,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 154.61 கோடிடோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 76,32,024 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 18,86,935 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திவருகிறார்.இந்த ஆலோசனையின் போது  தடுப்பூசி செலுத்தும் வேகம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நடவடிக்கைகள், கொரோனா நிவாரண நிதிஉதவிகள், பொருளாதார மீட்பு நடவடிக்கை ஆகியவை குறித்து  விவாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் முதன் முறையாக அனைத்து மாநில முதல்வர்களையும் பிரதமர் மோடி காணொலி மூலம் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மேலும், ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நிதி ஆயோக் உறுப்பினரான டாக்டர் வி.கே.பால் உள்ளிட்டோர்  பங்கேற்றுள்ளனர்.

Related Stories: