இந்தியாவுக்கும் ஆபத்து; பூடான் எல்லையில் சீனா 200 புதிய கட்டுமானங்கள்: செயற்கைக்கோள் புகைப்படத்தில் அதிர்ச்சி தகவல்

திம்பு: பூடான் உடனான சர்ச்சைக்குரிய எல்லையில் ஆறு இடங்களில் சீனா 200க்கும் மேற்பட்ட புதிய கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவது செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலமாக அம்பலமாகி உள்ளது. இந்திய எல்லைப் பகுதியில் சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதுமட்டுமின்றி பூடான் எல்லையையும் ஆக்கிரமித்து, சீனா அட்டகாசம் செய்து வருகின்றது.அமெரிக்காவை சேர்ந்த ‘ஹாக்ஐ’ என்ற தரவு பகுப்பாய்வு நிறுவனம், பூடான் எல்லையில் 6 இடங்களை ஆக்கிரமித்து, 200க்கும் மேற்பட்ட  கட்டுமான பணிகளை சீனா மேற்கொண்டு வருவதை செயற்கைக்கோள் மூலம் கண்டறிந்துள்ளது.

சீனாவின் மேற்கு எல்லைப் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டில் இந்த பணிகள் விரைவுபடுத்தப்பட்டதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன. இது, இந்தியாவின் பாதுகாப்புக்கும் ஆபத்தானது. இந்நிலையில், சீனாவின் செ்யல் குறித்து பூடான் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘எல்லை பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக பேசக்கூடாது என்பது பூடானின் கொள்கையாகும். எனவே, இது தொடர்பாக கருத்துகளை கூற முடியாது,’ என்று தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவு துறை அமைச்சகம் தனது அறிக்கையில், ‘தனக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணிகளை மேறகொள்வது, சீனாவின் இறையாண்மைக்கு உட்பட்ட விவகாரம். இது, உள்ளூர் மக்களின் வேலை மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையாகும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியா - சீனா 14ம் கட்ட பேச்சு : கடந்த 2020ம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவ முயன்றபோது மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது.இந்த பதற்றத்தை  தணிக்கவும், படைகளை வாபஸ் பெறுவது பற்றியும் இருநாட்டு  ராணுவமும் ஏற்கனவே 13 சுற்று  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இதன் பலனாக, பாங்காங்  ஏரி,கோக்ரா பகுதிகளில்  இருந்து படைகள் திரும்ப  பெறப்பட்டன. எனினும்,  ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகள் விலக்கும்  பிரச்னை முடிவுக்கு வரவில்லை. இது தொடர்பாக இரு  நாட்டு ராணுவ  கமாண்டர்களின் 14வது சுற்று பேச்சுவார்த்தை  நேற்று தெடாங்கியது.

Related Stories: