திருப்புத்தூர் அருகே கண்மாய் தண்ணீரில் இறந்தவரை சுமந்து செல்லும் அவலம்: சாலை அமைக்க கிராமத்தினர் வலியுறுத்தல்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே சம்பப்பட்டி கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை கண்மாய் தண்ணீரில் சுமந்து கொண்டு சுடுகாட்டிற்கு செல்லும் அவலம் உள்ளது. இதனால் சாலை வசதி செய்துதர வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புத்தூர் ஒன்றியம், வாணியன்காடு ஊராட்சி, சம்பப்பட்டி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்தை இரு சமுதாயத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். கிராமத்தில் யாராவது இறந்தால் மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் கண்மாய் வழியாக உடலை தூக்கி செல்லவேண்டும்.

தற்போது பெய்த மழையினால் கண்மாயில் தண்ணீர் உள்ளது. இந்நிலையில், அக்கிராமத்தில் கிருஷ்ணன் மனைவி பொட்டு(70) இரண்டு நாட்களுக்கு முன் வயது மூப்பு காரணமாக இறந்துள்ளார். இறந்த மூதாட்டியின் உடலை உறவினர்கள், முறையான சாலை வசதி இல்லாததால் கண்மாய் தண்ணீரில் முழங்கால் அளவிற்கு இறங்கி சுமந்துகொண்டு சென்றனர். எனவே இப்பகுதியில் மயானத்திற்கு செல்லும் பாதையில் புதியதாக தார்சாலை அமைத்து தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில்; எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லை. பலமுறை பல மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறந்தவர்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் போது தண்ணீருக்குள் மிகவும் சிரமத்துடன் செல்லவேண்டி உள்ளதால், மயானத்திற்கு செல்லும் பாதையில், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக புதிய சாலை அமைத்து தரவேண்டும் என தெரிவித்தனர்.

Related Stories: