ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள்-முதல்வர் தொடங்கி வைத்தார்

திருமலை : ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை முதல்வர் ஜெகன்மோகன் நேற்று தொடங்கி வைத்தார்.

 ஆந்திர மாநிலம், விஜயவாடா தடேப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை முதல்வர் ஜெகன்மோகன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:

மத்திய அரசின் ஒத்துழைப்புடன் 32, மாநில அரசு 144 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 50 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆலைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 100 படுக்கைகளுக்கு மேல் உள்ள 71 தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகள் அமைக்க 30 சதவீத மானியம் வழங்கப்படும். மொத்தமாக 247  ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகள் மாநிலத்தில் இருக்கும்.

கடந்த காலங்களில் ஆக்சிஜன் டேங்கர்களை வெளிநாடுகளில் இருந்து எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று(நேற்று) முதல் ₹426 கோடியில் 144 ஆலைகள் மூலம் நிமிடத்திற்கு 44,000 லிட்டர் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறனை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அன்று- இன்று திட்டத்தில் மருத்துவமனை மற்றும் பள்ளிகளை சீரமைக்கப்படுகிறது.

திரவ மருத்துவ ஆக்சிஜனை கொண்டு செல்லவும், சேமிக்கவும் ₹15 கோடியில் 20கி.லிட்டர் கொள்ளளவு கொண்ட 25 கிரையோஜெனிக் டேங்கர்கள் வாங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 24,419 படுக்கைகளுக்கு ₹90 கோடியில் ஆக்சிஜன் குழாய்களை நேரடியாக அமைத்துள்ளோம்.  399 கி.லிட்டர் கொள்ளளவு கொண்ட 35 எல்எம்ஓ டேங்கர், மொத்தம் 390 கி.லிட்டர் கொள்ளளவு கொண்ட 39 எல்எம்ஓ டேங்கர் ₹31 கோடியில் வாங்கி, மொத்தம் 74 எல்எம்ஓ  டேங்கர் மூலம் கோவிட் நோயை எதிர்கொள்ள செய்துள்ளோம்.

₹64 கோடியில் 183 சமுதாய சுகாதார நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். ஆக்சிஜன் படுக்கைகளுடன் 20 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் பராமரிப்பு மையங்களை அமைத்துள்ளோம். ₹8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பரிசோதனைக்காக மாதிரிகள் ஐதராபாத் மற்றும் புனேக்கு அனுப்பப்பட்டது.  ஆர்டிபிசிஆர் சோதனைகளை செய்யக்கூடிய 20 மேம்பட்ட வைரஸ் ஆய்வகங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டது. 19 ஆய்வகங்கள் புதிதாக அமைக்கப்படுகின்றன.  

மேம்படுத்தப்பட்ட ஆய்வகம் இருந்தால், மரபணு வரிசை ஆய்வகத்தை அமைக்கலாம். நாட்டிலேயே கேரளாவை அடுத்து விஜயவாடாவில் இந்த ஆய்வகத்தை அமைத்துள்ளோம்.

கிராம அளவில் ஒய்எஸ்ஆர் ஹெல்த் கிளினிக்குகளை அமைக்க 80 சதவீத கட்டமைப்புகள் நிறைவடைந்துள்ளன.  ஒவ்வொரு  குடும்பத்திற்கு குடும்ப மருத்துவர் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. புதிய பிஎச்சிக்கள், சமூக சுகாதார நிலையங்கள், பகுதி மருத்துவமனைகள் அனைத்தும்  நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய 104,108 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளது.

அப்போது, துணை முதல்வர் (மருத்துவ சுகாதாரம்) அல்லா காளி கிருஷ்ண னிவாஸ்(நானி), நகராட்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் போட்சா சத்தியநாராயணா, சி.எஸ். சமீர்சர்மா, மருத்துவ சுகாதார முதன்மை செயலாளர் அனில்குமார் சிங்கால், கோவிட் டாஸ்க் போர்ஸ் குழு தலைவர் எம்டி கிருஷ்ணபாபு, தலைமை செயலாளர் (மருத்துவ சுகாதாரம்), கோவிட் மேலாண்மை மற்றும் தடுப்பூசி ரவிச்சந்திரா, நிதிச்செயலர் குல்சார், 104 கால் சென்டர் இன்சார்ஜ் பாபு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல ஆணையர் கடம்நேனி பாஸ்கர், சுகாதார சிறப்புச்செயலர் நவீன்குமார், ஆரோக்கிய சிஇஓ வினய்சந்த்,  மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.  

இதையடுத்து, முகாம் அலுவலகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட புதிய ஆக்சிஜன் ஆலைகள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து முதல்வருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

18 வயது மேற்பட்டவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி

மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 4,21,13,722 பேருக்கு 100 சதவீதம் தடுப்பூசி  போடப்பட்டுள்ளது. இதில், 3,14,01,740 பேருக்கு 2வது டோஸ் போடப்பட்டுள்ளது.  15 முதல் 18 வயதுடையவர்களுக்கும்   24.4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட  வேண்டும். இதில், 20.2 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளது. மாநில  பிரிவினையால் ஐதராபாத்தை இழந்ததால் உயர்தர மருத்துவ நிறுவனங்களுடன் மாநிலம்  மாறியது. கிராம, வார்டு தன்னார்வலர்கள், கிராமம், வார்டு, செயலக அமைப்பு,  ஆஷா பணியாளர்கள், கிராம மருத்துவ மனைகள் மூலம் இதுவரை  33 முறை வீடு,வீடாக  ஆய்வு நடத்தப்பட்டது.

39 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்

16 அரசு மருத்துவ கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகளை கட்டி வருகிறோம். 4  இடங்களில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மருத்துவ சிகிச்சைக்காக யாரும்  கடன் வாங்க தேவையில்லை. மருத்துவ துறையில் 39 ஆயிரம் காலி பணியிடங்கள்  விரைவில் நிரப்பப்படும்.

Related Stories: