குடியாத்தத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் கால அவகாசம், மாற்று இடம் கேட்டு சாலை மறியல்- அதிகாரிகள் சமரசம்

குடியாத்தம் :  குடியாத்தத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் கால அவகாசம், மாற்று இடம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரசம் செய்து வைத்தனர்.

குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை கடந்த ஆண்டு நிரம்பி நீர் வெளியேறி குடியாத்தம் கவுன்டன்யா மகாநதி ஆற்றங்கரையில் இரு கரைபுரண்டு வெள்ளம் சென்றது. இதனால் குடியாத்தத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பின்னர், கலெக்டர் குமரவேல் பாண்டியன் உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் கணக்கிடப்பட்டது.

இதில் 1200க்கும் மேற்பட்ட கட்டிடங்களை அகற்ற உத்தரவிடப்பட்டது. அதன்படி குடியாத்தம் பச்சையம்மன் கோயில் பகுதி,  காமராஜர் பாலம் ஆகிய பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று நெல்லூர்பேட்டை  பாவாடும் தோப்பு, என்.எஸ்.கே. நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்றனர். தகவலறிந்த  அப்பகுதி மக்கள் மாற்று இடம் உடனடியாக வழங்க கோரியும், வீடுகளை அகற்றுவதற்கு கால அவகாசம் கேட்டும் குடியாத்தம்-பேரணாம்பட்டு சாலையில்  மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், வீட்டில் உள்ள பொருட்களை காலி செய்யாமல் கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் பொதுப்பணித் துறையினர், காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். மேலும், நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Related Stories: