வேலூர் மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் துரைமுருகன் நேற்று தொடங்கி வைத்தார்.தமிழகம் முழுவதும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து, ேவலூர் மாவட்டத்தில் கொணவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் துரைமுருகன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், டிஆர்ஓ ராமமூர்த்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி, மாநகர் நகர்நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அல்லது 273 நாட்கள் கடந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். வேலூர் மாவட்டத்தில் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயது கடந்தவர்கள் இன்றைய நிலவரப்படி 12 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். பூஸ்டர் டோஸ் போட தகுதியானவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி பஸ்சை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த புகைப்பட கண்காட்சி பஸ் பொங்கல் விடுமுறை தவிர்த்து 19ம் தேதி வரை வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: