சிங்கப்பூரில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களில் 30% பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்: நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் தகவல்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்தாண்டு கொரோனாவால் உயிரிழந்தோரில் 30 சதவீதத்தினர் 2 டோஸ் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஒங் யி குங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சிங்கப்பூரில் கொரோனா வைரஸ்களான டெல்டா, பீட்டாவை விட மரபணு மாற்றமடைந்த ஒமிக்ரான் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது மிக வேகமாக பரவி வருவதால் அந்நாட்டு அரசு பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று குறித்து சுகாதார அமைச்சர் ஒங் யி குங் நாடாளுமன்றத்தில் பேசுகையில், `சிங்கப்பூரில் கடந்தாண்டு கொரோனாவால் உயிரிழந்தோரில் 30 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களாக உள்ளனர்.

ஒட்டு மொத்தத்தில் சிங்கப்பூரில் தடுப்பூசி போடுவதற்கு தகுதியுடைய 90 சதவீதத்தினருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பைசர்-பயோஎன்டெக், கோமிர்னாட்டி தடுப்பூசிகள் மட்டுமே போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 2 டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு 270 நாட்கள் முடிந்திருந்தால், அவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது’. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: