இங்கிலாந்தை தொடர்ந்து அமெரிக்காவில் ரூ.730 கோடிக்கு ஓட்டலை வாங்கினார் அம்பானி

புதுடெல்லி: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அமெரிக்காவின் பிரபலமான சொகுசு ஓட்டலை ரூ.730 கோடிக்கு வாங்கியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க், சென்ட்ரல் பார்க் பகுதியில், ‘மாண்டரின் ஒரியன்டல் நியூயார்க்’ என்ற பிரமாண்ட நட்சத்திர ஓட்டல் உள்ளது. கடந்த 2003ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஓட்டலில் 248 அறைகள், நடன விடுதிகள், ‘ஸ்பா’, மதுபான கூடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன. அமெரிக்காவின் பிரபல தலைவர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த ஓட்டலுக்கு  அடிக்கடி வருவார்கள்.

இந்நிலையில், இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின், ‘ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம்’ அந்த ஓட்டலின் 73.37 சதவீத பங்குகளை ரூ.730 கோடிக்கு வாங்கி உள்ளது. சர்வதேச அளவிலான, ‘போர்ப்ஸ் பைவ் ஸ்டார் ஓட்டல்’, ‘போர்ப்ஸ் பைவ் ஸ்டார் ஸ்பா’ உள்ளிட்ட பல விருதுகளை இந்த ஓட்டல் வென்றுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்தாண்டு இங்கிலாந்தில் உள்ள பிரபலமான, ‘ஸ்டோக் பார்க்’ என்ற கிளப்பை ரிலையன்ஸ் விலைக்கு வாங்கியது. அதேபோல், மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சில் நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு கூடம் அடங்கிய ஓட்டலையும் இது புதிதாக கட்டி வருகிறது. டாடா குழுமம் ஏற்கனவே நட்சத்திர ஓட்டல் தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. இதேபோல், உலகளவில் ஓட்டல் தொழிலில் ரிலையன்ஸ் நிறுவனமும் ஈடுபடுவதாக தெரிகிறது.

Related Stories: