சென்னையில் வாகன சோதனையில் 80 கிலோ தங்கம் சிக்கியது: தி.நகர் பேருந்து நிலையம் அருகே பரபரப்பு

சென்னை: கொரோனா முழு ஊரடங்கின்போது போலீசார் நடத்திய வாகன சோதனையில் 80 கிலோ தங்கம் சிக்கியது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு உத்தரவுப்படி சென்னையில் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால், மாநகர காவல் எல்லையில் முக்கிய சாலைகள், இணைப்பு சாலைகள், ஒவ்வொரு காவல் நிலையம் எல்லைகள் என 312 இடங்களில் சாலையின் இடையே தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி தி.நகர் பேருந்து நிலையம் அருகே மாம்பலம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு ஆம்னி வேன் ஒன்று வந்தது. அதை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் எந்த வித ஆவணங்களும் இன்றி பல கோடி மதிப்புள்ள 80 கிலோ தங்கம் நகைகள் மற்றும் தங்க கட்டிகள் கொண்டு வந்தது தெரியவந்தது. தங்கத்திற்கான ஆவணங்கள் கேட்டதற்கு காரில் வந்த 4 பேர் உரிமையாளரிடம் இருப்பதாக தெரிவித்தனர். இதனால், போலீசார் வேனுடன் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடைகளுக்கு ஆர்டரின் படி தங்கம் கொண்டு சென்றது தெரியவந்தது. பின்னர் தங்கத்திற்கான ஆவணங்களை நகைகடை உரிமையாளர்கள் போலீசாரிடம் அளித்தனர். இதை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி மதிப்புள்ள 80 கிலோ தங்கம் மற்றும் அதை கொண்டு வர பயன்படுத்திய வாகனத்தை போலீசார் விடுவித்தனர். இதனால் சிறிது நேரம் தி.நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: