குளத்தில் மூழ்கி பக்தர் பரிதாப பலி: திருத்தணியில் சோகம்

திருத்தணி: திருத்தணியில் குளத்தில் மூழ்கி பக்தர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம், குன்னூர் தாலுகா, தூதூர் கிராமம் சேர்ந்தவர் சிவகுமார்(43). இவர் ஆறுபடை முருகன் கோயில்களுக்கு செல்வதற்கு மாலை அணிவித்து விரதம் இருந்தார். அதன்படி இவர் உள்பட சிலர் வேன் ஏற்பாடு செய்து முருகன் கோயில்களுக்கு செல்ல தீர்மானித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேனில் ஏராளமான பக்தர்களுடன் திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தார். அப்போது, தலையாறிதாங்கல் அருகே வந்தபோது, நேற்று ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால், போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்படவில்லை.

இதையடுத்து, அங்குள்ள சாய்பாபா கோயிலில் வேனை நிறுத்தி சிவகுமார் உட்பட அனைவரும் தங்கினர்.  இதனையடுத்து, நேற்று காலை சிவகுமார் சில பக்தர்களுடன் இ.என்.கே.சத்யா நகர் பகுதியில் உள்ள ஊராட்சி குளத்தில் குளிக்க சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக, நீரில் மூழ்கி தத்தளித்தார். இதனால் சக பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த  திருத்தணி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து, சடலத்தை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: