வாணியம்பாடியில் மணல் கொள்ளையர்களுக்கு பாலாற்றின் கரையோர நிலங்களை விற்றால் விவசாயிகளுக்கு பட்டா ரத்து-ஆய்வு செய்த தாசில்தார் எச்சரிக்கை

வாணியம்பாடி:  வாணியம்பாடியில் பாலாற்று கரையோர பகுதியில் விவசாய நிலங்களை மணல் கொள்ளையர்களுக்கு விற்றாலும், இடம் கொடுத்தாலும் பட்டா உடனடியாக ரத்து செய்யப்படும் என்று தாசில்தார் எச்சரிக்கை விடுத்தார்.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி ரோடு, மேட்டுப்பாளையம், உதயேந்திரம் ஆகிய பகுதியில் பட்டா இடத்தில் மணலை எடுத்து விற்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று பல்வேறு பகுதிகளில் வாணியம்பாடி தாசில்தார் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, கச்சேரி சாலையில் பாலாற்றின் அருகே இருக்கக்கூடிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பல வருடங்களாக வைத்திருக்கும் நபர்கள் மணல் கொள்ளையர்களுக்கு அந்த இடத்தை மணலை எடுப்பதற்காக பல லட்சத்துக்கு விற்பனை செய்து உள்ளனர். அதனடிப்படையில் மணல் கொள்ளையர்கள் மணல் குவாரி அமைத்து டிப்பர் லாரிக்கு ₹20 ஆயிரம்,  டிராக்டருக்கு ₹8 ஆயிரம் என மணலை எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்துள்ளனர் என தெரிய வந்தது.  அதனடிப்படையில் தாசில்தார் மோகன் அந்த இடத்தை ஆய்வு செய்தார்.அப்போது அவர், ‘இதுபோன்ற சட்ட விரோதமாக மணல் கடத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய நிலங்களை மணல் கொள்ளையர்களுக்கு வாகனங்கள் செல்வதற்காக இடம் கொடுத்தால் பட்டா  ரத்து செய்யப்படும்’’ என்று விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: