நீட் தேர்வு மசோதா குறித்து விவாதிக்க முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: தலைமை செயலகத்தில் கூடுகிறது

சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் கூடுகிறது. சட்டப்பேரவையில்  நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மசோதா இன்னும் ஆளுநரால் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படாமல்  உள்ளது. இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘‘நீட் தேர்வு விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவு இன்னும் ஆளுநரால் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து மேலும் வலியுறுத்திட அனைத்துகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சரை நேரில் சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால், அவர்களை சந்திக்க உள்துறை அமைச்சர் மறுத்துவருகிறார். எனவே, நமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நாம் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவதற்கு அனைத்துகட்சி கூட்டத்தை 8ம் தேதி கூட்டுவது என்று முடிவு செய்திருக்கிறோம். இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுத்து சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், அதிமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 13 கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

Related Stories: