2வது முறையாக ஹைப்பர்சோனிக் சோதனை வெற்றி: வடகொரியா கொக்கரிப்பு

சியோல்: கடந்த 4 மாதங்களில் 2வது முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி விட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ஐநா அமைப்பு போன்றவற்றின் பொருளாதாரத் தடைகளையும் மீறி,  வடகொரியா தொடர்ந்து ஏவுகணை, அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்தாண்டு ஓடும் ரயில், நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி பரிசோதித்தது. கொரோனா தொற்று, பொருளாதாரத் தடைகள், அதிபர் கிம் ஜாங் உன்னின் நிர்வாக தவறுகளால், இந்த நாட்டில் கடும் உணவு பஞ்சம் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. இருப்பினும், ஏவுகணை சோதனையை வடகொரியா நிறுத்தவில்லை.

வடகொரியாவின் கிழக்குக் கடல் பகுதியில் இருந்து மர்ம பொருள் பறந்ததாக தென்கொரியாவும், ஜப்பானும் நேற்று முன்தினம் சந்தேகம் தெரிவித்தன. அது, ஏவுகணையாக இருக்கலாம் என்றும் கூறின. இந்நிலையில், ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் பறந்து தாக்குதல் நடத்தும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை நேற்று முன்தினம் வெற்றிகரமாக நடத்தியதாக வடகொரியா நேற்று உறுதிபடுத்தியது. இதற்கு முன், கடந்தாண்டு செப்டம்பரிலும் முதல் இந்த ரக ஏவுகணையை இந்த நாடு வெற்றிகரமாக நடத்தியது. நேற்று முன்தினம் ஏவப்பட்ட ஏவுகணை, 700 கிமீ வரை பாய்ந்து இலக்கை தாக்கக் கூடியது.

தென் கொரியாவின் தொழில்நுட்பம் மற்றும் கொள்கை நிறுவன ஆய்வாளர் லீ சூன் கூறுகையில், ` வடகொரியா கடந்த செப்டம்பரிலும், தற்போது வெளியிட்டுள்ள ஹைப்பர்சோனிக் ஏவுகணை புகைப்படங்களில், ஏவுகணையின் முன்பகுதியில் சிறிய மாற்றங்கள் தென்படுகின்றன,’’ என தெரிவித்துள்ளார். எனவே, இது அணு குண்டை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

Related Stories: