கல்வியும், ஒழுக்கமும் மாணவர்களுக்கு முக்கியம்: நீதிபதி கலையரசன் அறிவுரை

சென்னை: சென்னைப் பல்கலைக் கழக வயது வந்தோர் மற்றும் தொடர் கல்வித்துறையின் சார்பில் ஜெயகணேஷ் நாகராஜன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நேற்று சென்னைப் பல்கலைக் கழக வளாகத்தில் நடந்தது. நீதிபதி கலையரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: கல்வியை கற்பதன் மூலம் மனித நேயம் நம்மிடம் வளரத் தொடங்கும். அதை அப்படியே பின்பற்ற வேண்டும். நமது கல்வி என்பது என்னவென்றால், அடிப்படியாக தெரிந்து கொள்ள வேண்டியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது அறிவைப் பெறுவதுதான் கல்வி. தீய விஷயங்களை தவிர்த்து நல்வழியில் செல்வது தான் அறிவு.  திறமை, மதிப்பு, நெறி, நம்பிக்கைகள், பழக்கங்கள், சுய முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் இணைந்தது தான் கல்வி. தகுதியோடு நம்மை செயல்பட வைக்கும் தன்மை கல்விக்கு உண்டு.

பொருளாதாரத்தை ஈட்டுதல் சமுதாயத்தில் நன்மதிப்பை ஏற்படுத்துவதும் கல்வி தான். எப்போதும் மாணவர்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சோம்பேறியாக முடங்கிவிடக் கூடாது. அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் கல்வி, தொழில்நுட்பத் திறன் உள்ளிட்டவற்றை நாளுக்கு நாளுக்கு உள் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது உங்களை நீங்களே அப்டேட் செய்து கொள்ள வேண்டும். கல்வி, ஒழுக்கம் இவை இரண்டும் நமக்கு முக்கியம். ஒழுக்கத்துக்காகத்தான் கல்வி. அதனால் நல்லவர்களோடு பழக வேண்டும். நல்லனவற்றை கற்றுக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் ஒழுக்கம் நம்மை தேடி வரும். கல்வி என்பது வேலை வாய்ப்பை பெறுவது மட்டும் அல்ல. நீங்கள் என்ன வேலையில் சேர வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை அடைவதற்கு கல்வியும் ஒரு காரணமாக இருக்கிறது. உங்கள் கல்வியின் அளவைப் பொறுத்து அது அமையும். அதனால் வேலைக்கும், கல்விக்கும் இடையே ஒரு நேரடித் தொடர்பு இருக்கிறது. எனவே மாணவர்கள் உயர்ந்த கல்வியை பெறுவதின் மூலம் உயர்ந்த வருவாய் ஈட்டித் தரும் பணியும் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே மாணவர்கள் எப்போதும் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டும். விழிப்புடன் இருந்தால் நீங்கள் உங்கள் இலக்கை அடைய முடியும்.

Related Stories: