மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பல்லாவரம், குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை மெட்ரோ ரயில் திட்டம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பல்லாவரம், குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி பேசுகையில், ‘‘சென்னை மெட்ரோ ரயில் சேவையை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை நீட்டிக்க அரசு ஆவன செய்யுமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:  வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சென்னை மாநகருக்கான புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக, மெட்ரோ ரயில் இணைப்பை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனைக் கருதி, இந்த தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் பன்னாட்டு நிறுவனத்தின் மூலமாக முடிக்கப்பட்டுள்ளது.  இந்த விரிவான இறுதி திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் தற்போது இருக்கிறது.  இந்த அறிக்கையின் அடிப்படையில், பணிகளைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

இ.கருணாநிதி: முதல்வரின் அறிவிப்புக்கு என் தொகுதியின் மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: