2,500 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால கல்வட்டங்கள் கம்பம் அருகே கண்டுபிடிப்பு

கம்பம்: கம்பம் அருகே சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால கல்வட்டங்களை வைகை தொல்லியல் பண்பாட்டு கழகத்தினர் கண்டுபிடித்துள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே ஏகலூத்து பகுதியில் வைகை தொல்லியல் பண்பாட்டுக்கழக நிறுவனர் பாவெல்பாரதி தலைமையில் தொல்லியல் ஆர்வலர்கள் வழக்கறிஞர் பாலதண்டாயுதம், முருகன், சிவராமன் உள்ளிட்டோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, புளியந்தோப்புக்குள் அருகருகே ஒரே தொடர் வரிசையில்  கிழக்கு மேற்காக 2,500 ஆண்டுகள் பழமையான 3  கல்வட்டங்கள், 2 சிதிலமடைந்த கற்குவை இருப்பது கண்டறியப்பட்டது.இதுகுறித்து வைகை தொல்லியல் பண்பாட்டு கழகத்தினர் கூறியதாவது:ஏகலூத்து பகுதியில்  கரடுமுரடான ஒழுங்கற்ற கற்களால் அமைக்கப்பட்ட இக்கல்வட்டங்கள் ஒவ்வொன்றும் ஏறத்தாழ 28 முதல் 30 அடி விட்டம் கொண்டவை. மேல்புறம் உள்ள கல்வட்டத்தின் நடுவில் கற்பதுக்கை சிதைந்த வடிவத்தில் உள்ளது.  2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள், இறந்த குழுத்தலைவர்களை தாழி அல்லது கற்பதுக்கையில் வைத்து அடக்கம் செய்து, அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒழுங்கற்ற கற்களை வட்டமாக அடுக்கி கல்வட்டம் உருவாக்கி இறந்தவரின் நினைவாக குத்துக்கல் அமைப்பது வழக்கம்.

 இந்நினைவுச் சின்னங்களை பெரிய கற்களைக் கொண்டு அமைத்ததால் அக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்பட்டது. இந்த நினைவுச்சின்னங்களை அவர்களது குழுவும், வம்சாவளியினரும் வணங்கி வந்துள்ளனர். இக்கல்வட்டத்தில் உள்ள குத்துக்கல்லில் தற்போது வெள்ளை மற்றும் காவி வண்ணத்தில் நாமம் வரையப்பட்டுள்ளது.  இக்குத்துக்கல் கன்னிமார் என்ற பெயரில் வழிபடப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள நிலங்களைக் காவல் செய்யும் பரவு காவல்காரர்கள் ஆண்டுக்கொருமுறை தை பொங்கல் நாளில் பொங்கல் வைத்து வணங்குவதாகச் சொல்லப்படுகிறது.கம்பத்தில் அருகருகே 3 கல்வட்டங்களும், கற்குவைகளும் ஒரே இடத்தில் கிடைத்திருப்பது அரிதானது. தமிழ்நாட்டில் பொதுவாக ஊற்றுகள் உள்ள பகுதிகளில் புதிய கற்கால வாழிடங்கள் இருப்பது பரவலாக கண்டறியப்பட்டுள்ளது. சேர நாட்டிற்கு  மலையாடிவாரத்தின் ஓரமாக பழமையான பெருவழி சென்றிருக்கலாம் என்பதை இக்கண்டுபிடிப்பு வலுப்படுத்துகிறது. இவ்வழி கம்பம் உத்தமபுரம், ஏகலூத்து, கன்னிமார் ஊத்து, கல்லொடைச்சான் பாறை, கொங்கச்சி பாறை, பெருமாள் கோவில், உள்ளுமனை, சுரங்கனாறு, கழுதைமேடு பகுதி வழியாகச் சென்றிருக்கலாம்.இவ்வாறு கூறினர்.

Related Stories: