நீடாமங்கலம் இ.கம்யூ., நிர்வாகி நடேச.தமிழார்வன் கொலை வழக்கு.: தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது

திருவாரூர்: நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடேச.தமிழார்வன், இவரின் வயது (51).

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், நீடாமங்கலம் ஒன்றிய செயலராக 10 ஆண்டுகளாக இவர் இருந்து வந்தார். நவம்பர் 10-ம் தேதி மாலை 4:00 மணி அளவில் நீடாமங்கலம் கூட்டுறவு வங்கி அருகில், தன் காரில் வந்து இறங்கி உள்ளார். அப்போது, அங்கு மூன்று பைக்குகளில் வந்த மர்மநபர்கள் அவரை அரிவாளால் தலை பகுதியில் சரமாரி வெட்டி தப்பி ஓடினர்.

படுகாயம் அடைந்த நடேச.தமிழார்வன் அதே இடத்தில் உயிரிழந்தார். இதையறிந்த அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் நீடாமங்கலம் கடை வீதியில் உள்ள கடைகள் மற்றும் அவ்வழியே சென்ற வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவாரூர் எஸ்.பி., விஜயகுமார் விசாரணையை மேற்கொண்டார். அதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டது.  

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து , குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பூவனூர் ரஜினியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் இந்த கொலை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். அதனால் பூவனூர் ரஜினியை தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: