தமிழகத்தில் ஒரே மாதத்தில் 9,498 பேர் கைது ரூ.27.66 கோடி ஹெராயின், குட்கா, கஞ்சா பறிமுதல்: பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா விற்றால் புகார் தரலாம்; டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் ஒரே மாதத்தில் 9,498 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ரூ.27.66 கோடி மதிப்பிலான ஹெராயின், குட்கா, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது புகார் அளிக்கலாம் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த டிசம்பர் 6ம் தேதி முதல் கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரி விற்பனைகளை தடுக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் 9,498 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிக பட்சமாக தமிழகத்தில் இதுவரை பிடிக்காத அளவிற்கு தூத்துக்குடியில் ரூ.23 கோடி மதிப்பிலான 23 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, கடந்த 4 வாரத்தில், கஞ்சா கடத்திய மற்றும் விற்பனை செய்ததாக 1,272 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,221 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2.35 கோடி மதிப்புள்ள 2,299 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 7 நான்கு சக்கர வாகனங்கள், 100 இரு சக்கர வாகனங்கள் என 107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்த மொத்த வியாபாரிகளான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நவீன்குமார் (25), சேதுபதி (22) மற்றும் நட்ராயன் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை கைது செய்ததன் மூலம் கஞ்சா மொத்த விற்பனையும் பெருமளவில் முடக்கப்பட்டது. அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 220 கிலோ, கோவையில் 32 கிலோ மற்றும் வேலூரில் 34 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று சட்டவிரோதமாக புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தியதாக 8,142 வழக்குகளில் 7,708 பேர் கைது செய்யப்பட்டு ரூ.5.31 கோடி மதிப்புள்ள 40 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 7,085 கிலோ, ராமநாதபுரம் 1,263 கிலோ, தர்மபுரியில் 1,806 கிலோ மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் 924 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 43 நான்கு சக்கர வாகனங்கள், 47 பைக்குகள் என 90 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சென்னையில் நடந்த சோதனையில் ஆந்திராவை சேர்ந்த கஞ்சா வியாபாரி மங்கராஜ் (35), அவரது கூட்டாளிகள் நொண்டி லட்சுமி (60), கவிதா (25) மற்றும் சரண்குமார் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 96 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

கடந்த 4 வாரங்களில் புகையிலை குட்கா சோதனையில் செய்ததில் 2,142 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டு, விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்னர். தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா விற்பனை செய்பவர்கள், கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை பற்றிய விவரங்களை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் 100, 112 மற்றும் அருகில் உள்ள காவல் நிலைய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். மேலும் தமிழ்நாடு காவல்துறையின் சமூக வலைதளங்களான முகநூல் https://www.facabook.com/tnpoliceofficial, டிவிட்டர் @tnpoliceoffl மற்றும் வாட்ஸ்அப் 94981-11191 ஆகிய சமூக ஊடகங்களில் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: