குடிநீர் வசதி கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

தஞ்சை : குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி தலையில் காலி குடங்களை சுமந்து வந்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவோணம் ஒன்றியம் நெய்வேலி வடபாதி விபத்தை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம் நெய்வேலி வடபாதி ஊராட்சியை சேர்ந்தது நரிப்பத்தை கிராமம். இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவுக்கு குடிநீர் தொட்டி ஒன்று மட்டும் மேலத்தெருவில் அமைக்கப்பட்டுள்ளது. கீழத்தெருவிற்கு குடிநீர் வருவதில்லை. இதனால் கீழ் தெருவில் வசித்து வரும் 30 குடும்பங்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம்.

இதையடுத்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து நரிப்பத்தை கீழத்தெரு மக்கள் காலி குடங்களை தலையில் சுமந்தவாறு தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கீழத்தெரு மக்கள் பயன்பெறும் வகையில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைத்து தந்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். தெருவிற்கு வரும் சாலை பழுதடைந்து உள்ளதால் அதனையும் சீரமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர்.

Related Stories: