திருவான்மியூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு துப்பாக்கி முனையில் ஊழியரை மிரட்டி ரூ.1.32 லட்சம் கொள்ளை: தப்பியோடிய முகமூடி கொள்ளையர்களுக்கு தனிப்படை வலை

சென்னை: திருவான்மியூர் ரயில் நிலையத்தில், துப்பாக்கி முனையில் ஊழியரை மிரட்டி, அவரது கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு, பயணிகளிடம் இருந்து வசூலான 1.32 லட்சத்தை முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக, ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, எஸ்பி அதிவீர பாண்டியன் தலைமையில் 2 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே, இரு மார்க்கத்திலும் மின்சார ரயில்கள் அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தை தினமும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என, ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பகுதியில், அரசு சட்டக்கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன. எனவே,  இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் காலை, மாலை வேளையில் பயணிகள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக திருவான்மியூர் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இப்பகுதியில், உள்ள டைடல் பார்க், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த ஏராளமானோர் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து செல்வது வழக்கம். இந்த ரயில் நிலையத்தின் கீழ் தளத்தில் மின்சார ரயில் பயணிகளுக்கான  டிக்கெட் கவுன்டர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்படும் தினசரி, வாராந்திர ரயில்களுக்கான விரைவு ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட் கவுன்டரும் இயங்கி வருகிறது. முதல் தளத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது. இங்கு வாகனங்களுக்கான பார்க்கிங் வசதியும் உள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் ஊழியர் டீக்காராம் மீனா (28), டிக்கெட் கவுன்டரை திறந்து உள்ளே சென்றார். அவரை பின்தொடர்ந்து 3 மர்ம நபர்கள் வந்தனர். முகமூடி அணிந்திருந்த அவர்கள், துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தனர். திடீரென கவுன்டர் அறைக்குள் அவர்கள் நுழைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த  டீக்காரம் மீனா அவர்களை பார்த்ததும், ‘நீங்கள் யார், எதற்காக உள்ளே வருகிறீர்கள்?’ என்று கேட்டுள்ளார். அதற்குள், 3 பேரும் அவரை சரமாரியாக தாக்கி, கை, கால்களை கட்டி, கத்த முடியாதவாறு வாயில் துணியை திணித்தனர். பின்னர், அங்கு பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த 1 லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாயை கொள்ளையடித்துக்கொண்டு, கவுன்டர் கதவை வெளியே பூட்டிவிட்டு, தப்பி சென்றனர். இதுதொடர்பாக, ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, எஸ்பி அதிவீர  பாண்டியன் தலைமையில் 2 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி  வருகின்றனர்.

* சிசிடிவி இல்லை

திருவான்மியூர் ரயில் நிலையம் அருகில், மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. அப்பணியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவர்களில் யாரேனும் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனரா அல்லது  ரயில்வே ஊழியர் டீக்காராம் மீனா தனியாக பணியில் ஈடுபடுவதை நோட்டமிட்டவர்கள் யாரேனும் கொள்ளையடித்து சென்றனரா என பல்வேறு கோணங்களில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் எங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: