முள்படுக்கையில் படுத்தபடி பெண் சாமியார் அருள்வாக்கு: திருப்புவனம் பக்தர்கள் குவிந்தனர்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே பெண் சாமியார் முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறினார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தலில் பூங்காவனம் முத்துமாரியம்மன் மற்றும் மாசாணி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பெண் சாமியார் நாகராணி அம்மையார் ஆண்டுதோறும் 48 நாட்கள் விரதமிருந்து மார்கழி 18ம் தேதி முள்படுக்கையில் படுத்து தவமிருந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சி கோயிலில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை கோயில் வாசலில் கருவேலம் முள், உடைமுள், இலந்தைமுள், சப்பாத்திக்கள்ளி உட்பட பல்வேறு வகையான முட்களால் 6 அடி உயரம், 10 அடி அகலத்திற்கு முள் படுக்கை அமைக்கப்பட்டது. பெண் சாமியார் நாகராணி அம்மையார் கோயில் வளாகத்தில் உள்ள முத்துமாரி அம்மன், மாசாணி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். ஏராளமான பெண் பக்தர்கள் கும்மி கொட்டி, பாட்டுப்பாடி வழிபட்டனர்.

அதன் பின்னர் பூசாரி மாரிமுத்து சுவாமிகள் பூஜை செய்து பெண் சாமியார் நாகராணி அம்மையாரை முள்படுக்கைக்கு அழைத்து வந்தார். அருள் வந்து ஆடியபடியே வந்த பெண் சாமியார் முள் படுக்கையில் ஏறி நின்று சில பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். சற்று நேரத்தில் மயங்கியபடியே முள்படுக்கையில் படுத்தார். மூன்று மணிநேரம் முள் படுக்கையிலேயே படுத்து தவம் செய்தார். இதனை காண சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

Related Stories: