பாகிஸ்தான் பிரதமர் இம்ரானின் முன்னாள் மனைவி மீது துப்பாக்கி சூடு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் சென்ற கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பிரிட்டிஷ் - பாகிஸ்தான் வம்சாவளியும், பத்திரிகையாளருமான ரேஹம் கானுக்கும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்நாட்டின் பிரதமருமான இம்ரான் கானுக்கும் கடந்த சில ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இருவருக்குமான உறவு 10 மாதங்கள் மட்டுமே  நீடித்தது. பின்னர் இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில், ரேஹம் கான் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நான் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது, சிலர் என்னுடைய கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்; இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த அவர்கள், துப்பாக்கியுடன் பின்தொடர்ந்து வந்தனர். என் காரை நிறுத்த முயன்றனர். ஆனால், எனது பாதுகாவலர் மற்றும் டிரைவரின் முயற்சியால் தப்பித்தேன். இதுதான் இம்ரான் கானின் புதிய பாகிஸ்தானா? அவர்கள் கோழைகள், கொள்ளையர்கள், பேராசைபிடித்த மக்களின் நாடு.

நான் சாதாரண பாகிஸ்தான் குடிமக்களைப் போன்று வாழவும், இறக்கவும் விரும்புகிறேன். என் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்த அரசாங்கம்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்’ என்று காட்டமாக தெரிவித்துள்ளார். இம்ரான் கானை வெளிப்படையாக பலமுறை ரேஹம் கான் விமர்சித்துள்ளார். அதேபோல், தனது கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: